நினைவெல்லாம் தாழைமனம்
***********************************************
திருவிழா
ஆரம்பம். அவள் வீட்டுக்கு போவது என்றாலே அத்தனை குஷி தான் எனக்கு. கொண்டாடித்
தீர்த்துவிடுவார்கள். அந்த வீட்டின் சொல்லப்பெண் துர்கா தான் எத்தனை அழகு. குட்டிக்
குறும்பு. இனிக்கும் கரும்பு.
ஆடி மாத கோவில் விழாக்களில் கூழ் குடித்துவிட்டு, அங்கங்கே
நடக்கும் திருவிழாக்களில் கலந்து கொண்டுவிட்டு இந்த வீட்டுக்கு எப்ப வருவோம்னு காத்துக்கிடப்பேன்.
வீட்டிற்குள்
வரவேற்கும் அழகே தனி. வாசல் நிறைய கோலம். வீடு நிறைய
விளக்கு ஒளி. காற்று நிறைய பூக்கள் வாசம். மனம் நிறைய
அன்பு. இது போதாதா. வருஷா வருஷம் துர்கா அப்பா வேண்டுவாரோ என்னவோ நான் வேண்டுவேன். மின்னல் பொழியனும்னு..அப்ப தான
தாழை பூக்கும். அந்த தாழை வாசம் தான் துர்காவுக்கு எல்லாத்தையும் விட ரொம்ப
புடிக்கும்.
புத்தகம்
நடுல மயிலிறகு வைக்கறது மாதிரி இவ தாழைய வச்சிப்பா. குட்டிப்போடும்னு
நினச்சிருப்பாளோ.
திருவிழா
நாளைக்கு தான். இன்னைக்கே எனக்கு அழைப்பு வந்திடும். என்னை அலுங்காம
உக்கார வச்சு புது சொக்காலாம் போட்டுவிட்டு அழகா அலங்காரம் பணணிவிட்டு..பின்னல் ஜடை
போட்டு அதுல முத்துலாம் பதிச்சு..வகைவகையா நிறம்நிறமா பாசிலாம் போட்டுவிட்டு…சிலசமயம்
துர்காவுக்கும் எனக்கும் ஒரு நிறத்துல பாவாடை அமைஞ்சிரும். ஒரே கொண்டாட்டம்
தான் அப்போ எல்லாம். இப்படி அலங்காரம் பண்ணிவிட்டு சுடசுட பால் பாயசம்.. ஏலக்கா கமகமக்க…ம்ம்ம்ம்.அமிர்த்ம்
தோத்துடும். அதுல சுவைக்கு காரணம் துர்கா அம்மாவோட அன்பு தான்னு சொல்லியா
தெரியனும்.
துர்கா அந்த
முட்டமுட்ட கண்ணால வச்ச கண் வாங்காம அப்படி பார்ப்பா என்னை. எதாவது சரி
பண்றேன்னு சரிபண்ணி விடுவா. சில சமயம் கன்னம் வழிச்சு தலையில சொடுக்குவா…கிழவி போல..அது ஆதூரம்.
அடுத்த நாள் தான் இருக்கு கொண்டாட்டம். காலைலேயே
வீட்டு வாசல்ல பெரிய படி கோலம். துர்கா கொஞ்சம் வளர்ந்ததும் அவ தான் போடுவா.கோலக்குழல்
ல சும்மா சர் சர்னு இழுத்து தெருவடைச்சு போடுவா. சாமி பூஜைக்கு
வேணுங்கறதுலாம் துர்கா அப்பாவே செய்வாரு.
ஒரு ஸ்டுல்
இருக்கும்.அதோட கால்ல வாழக்கன்று கட்டிவிட்டு சுத்தி மாவிலைத் தோரணம்
கட்டுவாரு. அதுல இந்த துர்கா குட்டி ஏதாவது பாசிமணி கோர்த்து கட்டிவிடும். அதுக்கு நடுல
பலகை ஒன்னு போட்டு விடுவாரு. அந்த பலகையில கோலம் மின்னுதா. துர்கா தான்
போட்டா. இழை கோலம். அது அவளுக்கு ரொம்ப புடிக்கும். இப்ப மண்டபம்
ரெடி.
அதுக்குள்ள
தான் சாமிய அழைச்சு பூஜை. பூஜை நேரத்துக்கு நானும் துர்காவும் பளபளன்னு ரெடி ஆகிடுவோம். அப்றம் எனக்கு
பாலும் பழமும் குடுத்து அழைச்சு வந்து பூவாலையே கொண்டாடித் தீர்த்துடுவாங்க. மல்லி முல்லை
அரளி சம்மங்கி தாமரை ஜாதிமல்லி வெண்சாமந்தி துளசி பன்னீர் ரோஜா மருஊ மரிக்கொழுந்து
தாழை..இத்தனைப்பூ..அத்தனையும் அன்பு.
துர்கா அப்பா பூஜை வாசிக்க அம்மா பண்ணுவாங்க. அடுத்து சாப்பாடு
தான். பருப்பு பாயாசம் மோதகம்
எள்ளு பூர்ணம் வச்ச கொழுகட்ட பச்சரிசி இட்டலி சுண்டல் இன்னும் பிற. சாப்ட சாப்ட
கொண்டா கொண்டான்னு தான் இருக்கும். அந்த அன்பின் நிறைவு
அப்படி.
சாயந்தரம் ஆனதும் கூடையல பூவ எடுத்துட்டு கிளம்பிடுவா துர்கா. அந்த பத்மாவோட
பெரிம்மா இருக்காங்க ல, அவங்க பூ வேலைப்பாடோட ஜடை தைப்பாங்க. அங்க போனா, துர்கா குட்டி
தலையில தாழை உச்சியில வச்சு, மல்லி கனகாம்பரம் மருஊ சுத்தி பின்னல் போட்டு ஜடை குஞ்சம்
வச்சிட்டு வருவா. அன்னைக்கு போட்ட ஜடைய ஞாயிறு சாயங்கலம் தான் கழட்டுவா. அவளுக்கு
புடிக்கும் தான் அதையும் தாண்டி அவளுக்கு அத்தனை அழகாவும் இருக்கும்.
அப்புறம்
பின்னல் ஜடை அசைய, புதுப் பாவாடை போட்டுகிட்டு மினுக்கிக்கிட்டு கிளம்பிடுவா. அக்கம் பக்கம்
இருக்கறவங்கள தன் வீட்டுக்கு அழைக்க. கையில ஒரு அழகான மயில்
குங்குமச்சிமிழ். அத எடுத்துட்டு இந்த மயில் கிளம்பிடும். அவ கூப்டு
வரமா இருப்பாங்களா. அத்தனைப்பேரும் அவ்ளோ ஆசையா வந்து இருந்து, பாட்டுப்பாடி
குதூகலித்துவிட்டு போவாங்க. அவங்களுக்கும் சுண்டல் பாயாசம் பரிமாறப்படும். உண்மையாக
நம் பாரம்பரிய கொண்டாட்டங்களில் இருக்கக்கூடிய உன்னதம் இந்த கூடல் தானே..கூடி வாழ்வதும்
குதூகலிப்பதும் தான.
அன்னைக்கு இரவெல்லாம் என் கிட்ட தான் படுத்துக்குவா துர்கா. அப்ப அப்ப
திரும்பி பாத்துப்பா. கோவில் உள்ள இருக்கற மாதிரி இருக்குன்னு சொல்லுவா. அவளே குட்டி
சாமி தான. அடுத்த நாள் சின்ன கோலம் சின்ன பூஜை பிஞ்சு கையால அவ தான்
பண்ணுவா. அதுல ஒரு சந்தோசம் அவளுக்கு.
ராத்திரி
வேளையில துர்காவோட அம்மா மெல்லிய குரல்ல நீலாம்பரி ல பாடுவா. அவ்வளோ சுகமா
இருக்கும். சாயங்காலம் இருந்தே நிலவு தேயறது மாதிரி துர்கா முகம் வாட
ஆரம்பிச்சுடும். என்னடா இந்த புள்ள இப்படி ஆகுறாளேன்னு இருக்கும். அப்றம் இருக்கும்
தான. கொண்டாடி தீர்த்துட்டு இப்ப அரிசி பானைக்குள்ள இறக்கி வைக்கனும்னா.?! எனக்கும்
கூட சங்கடம் தான். திருவிழா முடிஞ்சு ஊருக்கு போற மாதிரி மனசெல்லாம் கனக்குது.
இப்படி இந்த மூனு
நாள் அவ கூடவே கொண்டாட்டமா இருக்கறது தான் ஆனந்தம். விழா முடிஞ்சதும்
இப்படி கிளம்பறது கஷ்டமா தான் இருக்கு. இதோ தொட்டு தொட்டு
கொஞ்சிக்கறா துர்கா. அந்த கையில எத்தனை அன்பு. அம்மா பாட்டு
தொடருது. துர்கா ஏக்கமும் தொடர்ந்து வருது. அரிசி பானைக்குள்ள
அமைதியா உக்காந்துட்டேன். துர்காவுக்காக ஒரு தாழை மடல் மட்டும் உதிர்த்துவிட்டேன். கண் நிறைஞ்சு, பத்திரமா
எடுத்து தன் புத்தகத்துக்கு நடுல வைக்கறா. இன்னும் எத்தனை
பக்கங்கள் நிறையுமோ. அடுத்த வருஷம் வரை அரூபத்தில் தொடரும் தாழைமணம்.
இரம்யாநடராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக