புதன், 1 ஜூலை, 2026

மனசெல்லாம் நிறைஞ்சிருக்கும் மாமா

 

மனசெல்லாம்  நிறைஞ்சிருக்கும் மாமா உங்ககிட்ட

என் மனசு நிறைச்சிருக்கும் ஒருத்தன் பத்தி சொல்ல

இன்னொருத்தன் பெருமைய பேச நானும் நினைக்கல்ல

இவனொருத்தன்  தவிர என் வாழ்வில் வேறு தேவனில்ல

 

சொந்தம் விடக்கூடாதுன்னு தன் அத்தமவள கைபிடிச்சான்

மகராசியா அவள வாழவைக்க தினம் உழைச்சான்

நேசமாத்தான் அவள நெஞ்சுக்குள்ள பூட்டிவச்சான்

காலமெலாம் அவளோட வாழ நாளும் கனவுகண்டான்

அவன் கனவு கலைக்கத்தான் நானும் பொறந்துவந்தேன்

ஆறுமாசம் தாண்டும்முன்ன ஆத்தாள பறிகொடுத்தேன்

ஊர்கூடி அவனுக்கு இன்னொரு கண்ணாலம் பேசிவைக்க

இனி என் உசுரு இவதான்னு என்னையள்ளி தூக்கிகிட்டான்

அன்னைக்கு தூக்கினவன் இன்னைக்கும் சுமக்குறான்

ஆத்தாளுக்கும்  மேல ஒசரமாதான் நிக்கிறான்

 

பாண்டியாட்டம் அவனோட பல்லாங்குழி அவனோட

திருவிழா அவனோட தினம் தூக்கம் அவனோட

ஆத்தான்னு ஒரு உருவம் படத்திலகாட்டிடுவான் ஆனா

வேட்டிகட்டிய ஆத்தாவா என் நெஞ்சில வாழ்ந்திருக்கான்

பத்தாவது போகையில பதைபதைச்சு போயிருந்தான்

ஆத்தா இருந்திருக்க வேணுமுன்னு அழுதிருந்தான்

குத்த வச்ச நாளைக்குதான் அவன் அழுக புரிஞ்சது

கலங்கிநிக்கும் அந்த மனம் என் புள்ளயா தெரிஞ்சது

 

தோளில் சுமந்தவன் தோழனா மாறிநின்னான்

தோள்கொடுத்து பலவிசயம் சாதிக்க உரமும்தந்தான்

காலமெலாம் அவனோடன்னு கனவு நான் கண்டிருக்க

என் கண்ணாலக்கனவோட ராத்தூக்கம் அது இழந்துநின்னான்

மகராசம் எவனோ அவன் ராணிக்குன்னு காத்திருந்தான்

ஊரெல்லாம் தேடிதேடி உம்ம கொண்டு  நிறுத்திபுட்டான்

 

என் அப்பன் கைகாட்ட என் கழுத்த நீட்டிபுட்டேன்

எதுவோ எப்படியோ உம்ம கைகோர்த்து வந்துபுட்டேன்

இருபது வருசம் இழைஞ்சிப்போன உறவு அது

இருக்கும் வரைக்கும் இறக்காத பந்தம் அது

பொண்ணா பொறந்தேன்னு விட்டுவிட முடியாது

என் நரைச்சமுடி புள்ளைய மறக்கவும் முடியாது

 

அவன கூட்டிவந்து அவன் கூனவிடமாட்டேன்

உம்ம பிரிச்சிபோயி உம்ம குறுகவிடமாட்டேன்

என் நெஞ்சுபாசம் மட்டும் நீர் அறிஞ்சாபோதுமய்யா

அந்த நெனப்ப சிதைக்காம ஒருகைமட்டும் தாருமய்யா

வார்த்தையில அடங்காத வலிமையான நேசமது

அதுவிளங்கும்  நீரும் ஒரு பொண்ணு  பெறும்போது

கருத்துகள் இல்லை: