இந்த வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யங்களை உள்ளடக்கி இருக்கு.எவ்வளவு அபூர்வமான விஷயங்களை உள்ளடக்கி நகருது.நினைக்கவே ப்ரமிப்பா இருக்கு.
ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையையும் திறந்து பார்த்தா அதில் இருக்கும் அதிசயங்கள் அவங்களுக்கே விளங்கும்.ஆனா அதை பார்க்க புரிஞ்சிக்க தான் இங்க யாருக்குமே அவகாசம் இல்லை.நானும் அப்படி தான் இருந்தேன்.அந்த நாள் வரைக்கும்.எதிர்பாரா விதமா தான் அந்த சந்திப்பு நடந்தது.ஆனால் அது என்னை ரொம்ப பாதிச்சது.ஆமா அவள் தான் அவளை தான்.என்னடா இது மறுபடி ஒரு 96படமா….பவர் பாண்டி யா…இப்படி எல்லாம் நினைக்காதீங்க.அவள் என் காதலி தான் ஆனா நான் சொல்ல வருவது அந்த சந்திப்பின் தாக்குதலை.முதல்ல எங்க சந்திப்பு பற்றி சொல்றேன்.
எதுக்கு ஓடறோம் என்ன செய்யறோம்னு தெரியாம கண்ண கட்டி காட்டில் விட்ட மாதிரி ஆட்டுமந்தை கூட்டமா பணம் வசதி கார் வீடு ன்னு சுத்திகிட்டிருக்கும் போது நமக்கெல்லாம் சில சமயம் வரும் பாருங்க ஒரு ஞானோதயம்.அது மாதிரி தான் எனக்கும் வந்தது.என்ன இந்த முறை ரொம்ப ஆழமா.அதனால தான் எப்பவும் போகிற கடற்கரை பூங்கான்னு இல்லாம ஊரவிட்டு தள்ளி இரைச்சல் இல்லாத ஒரு இடத்துக்கு போனேன்.அந்த மாதிரி இடம் அனேகமா காபி கடை தான் இருக்கும் நம்மூர்ல.நான் போனதும் அப்படி ஒரு கடை தான்.இயற்கை சூழல்ல எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் போங்கன்னு சொல்லாத இடம்.
அட்ரஸ் கேட்கறீங்களா…அப்புறம் தரேன்.
அங்க உட்கார்ந்து என் அலைபேசி அணைத்துவிட்டு சூடான ஒரு கோப்பை தேநீரோடு மரத்தடியில் உட்கார்ந்தேன்.ஏதோ அமைதி.ஆமாம் அலைபேசி அணைத்தாலே பாதி அமைதி கிடைத்துவிடும்.நான் யார் என்ன வேலை என்ன வயது எல்லாம் மறந்து மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த அணில்கள் பார்த்து இரசித்திருந்தேன்.திடீரென ஒரு மென்காற்று தலை வருட திரும்பினேன்.
அவளா அவளா அவளே தான்…அவளை தான் என் இதயத துடிப்பை இரட்டிப்பாக்கியவள்.என் கனவுகளை நிறங்களால் நிறப்பியவள்.என்னை உச்சத்தில் தூக்கி விட்டு தொலைந்து போனவள்.அவளை தான்.என் செல்வி.
நான் அவளை பார்த்துக்கொண்டிருக்க..அவளும் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.அடையாளம் தெரிந்தும் கொண்டாள்.அருகே வந்துக்கொண்டிருந்தாள்.இப்போதும் இதயம் துடித்தது.பரவசமா?காதல் மறுமுறை பூக்கிறதா?என்ன தெரியவில்லை. ஏறத்தாழ 20வருடம் ஓடிவிட்டது.
ஆனால் அவள் கண்ணில் அதே ஒளி.அவன் புன்னகை மாறவில்லை.வயதின் அடையாளம் ஆங்காங்கே இருந்தாலும் பெரிய வித்தியாசம் இல்லை.என்னை அறியாமல் அவளை பார்த்து நானும் சிரித்தேன்.அருகில் வந்த அவள் என்னை பார்த்து பேசத்தொடங்கினாள்.
“எப்படி இருக்கீங்க மிஸ்டர்”அதே ஸ்வரம்
“நான் நல்லா இருக்கேன்”
“தெரியுது”என்னை ஏறிஇறங்க பார்த்துவிட்டு ஒரு சிரிப்பு உதிர்த்தாள்.வெட்கமாய் போயிற்று எனக்கு.இதுவரை கண்ணாடி சரியாக பார்க்காதது நினைத்து முதன்முறை வருந்தினேன்.
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.”
“நீ எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன்”
நீண்ட மௌனம்…என்ன பேச எங்கு தொடங்க புரியவில்லை எனக்கு.
“நீ இப்போ ஃப்ரீயா?ஏதாவது அவகர வேலை இருக்கா?பேசலாமா?”
“என்ன இது ..பேசலாம் தாராளமா…”
“சரி அப்போ எனக்கும் ஒரு டீ சொல்லு”
ஓடிச்சென்று ஒரு டீ வாங்கி வந்தேன்.அதற்குள் அவள் யாருடனோ பேசி முடித்து தன் அலைபேசி அணைத்தாள்.மறக்காமல் அவள் நம்பர் வாங்கனும் எண்ணிக்கொண்டே டீயை அவளிடம் நீட்டினேன்.
“நன்றி ப்ரபா”ப்ரபாகர் என் பெயர்.எத்தனை வருடம் கழித்து அவள் வாயால் அந்த பெயர்.சிலிர்த்து எனக்கு.
மீண்டும் மௌனம்.
“என்ன எதுவும் பேச மாட்டியா”
“இல்ல எங்கிருந்து ஆரம்பிக்கன்னு புரியலை”
சிரித்தாள்.
“நானே ஆரம்பிக்கறேன்.அதுதான வழக்கம்”
“உனக கு எல்லாம் ஞாபகம் இருக்கா செல்வி…மறந்திருப்பன்னு நினைச்சேன்”
“ப்ரபா…கோபமா…நான் மறக்க மாட்டேன்னு உனக கு தெரியும்.அதுவிடு…இப்போ இங்க இருந்து ஆரம்பிக்கலாம்…நீ இங்க என்ன பண்ற”
“எதுக்கு வந்தேன் தெரியலை செல்வி ஆனா இப்போ மனம் ஏனோ நிறைஞ்சிருக்கு”
“இப்ப ஒத்த வரி பதில் தான் எப்பவும்.சரி நான் இங்க எதுக்கு வந்தேன் தெரியுமா?”
“எதுக்கு?”
“உன்னை பார்க்கத்தான்”கடகட என சிரித்தாள்
“என்ன சொல்ற செல்வி”
“நான் இந்த பக்கமா போனேன் பா…இங்க உன்னை பார்த்தேன்.நீ தானோன்னு ஒரு சந்தேகம் சரின்னு இறங்கிட்டேன்..”
“நீ இந்த ஊர்ல தான் இருக்கியா…என்ன பண்ற”
“இப்ப தான் கொஞ்சநாள் ஆச்சு ப்ரபா.உன் குடும்பம் பத்தி சொல்லு “
என் திருமணம் முதல் என் மகளின் மஞ்சள் நீராட்டு வரை ஒரு வழியாக சொல்லி முடித்தேன்.
“செல்வி…உன் குடும்பம்”
“எனக்கு இரண்டு பசங்க.அவர் சாஃப்ட்வேர். பசங்க படிப்புக்காக தான் இந்த ஊருக்கு வந்தோம்”
ஏதோ கேட்க தோன்றியது எனக்கு…பெருமூச்சாய் நிறுத்தினேன்.
“என்ன ப்ரபா…ஏதோ கேட்க வந்த…மனம் விட்டு பேசு பா…என்கிட்ட எந்த தயக்கமும் வேண்டாம்”
அவள் சொன் னது தான் தாமதம்...
“நாம் பழகின நாட்கள் எல்லாம் உனக்கு நினைவிருக்கா செல்வி.என்னை அடியோடு மறந்துட்டியா…ஏன் ஒருமுறை கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை”
“ப்ரபா…நாமக்குள்ள இருந்த அந்த அழகான நேசம் எப்பவும் என்னுள்ள இருக்கு.அது அழியாத அருமையான நினைவுகள்.உன்னை வெறுத்து ஒதுக்கலை ப்ரபா..விலகி நின்னேன் அவ்வளவு தான்.”
“விலகிப்போக என்ன காரணம் செல்வி.”
“ஏதேதோ காரணங்கள் ப்ரபா…உனக்கு நினைவில்லையா.அது முடிந்த கதை அது எதுக்கு இப்போ…”
“இதுவரைக்கும் ஒரு நிமிஷம் கூட நாம வாழ்க்கையில சேர்ந்திருக்க கூடாதான்னு தோனலையா உனக்கு”
“ப்ரபா எத்தனையோ முறை நினைச்சிருக்கேன்.ஏங்கி இருக்கேன்.ஆனால் அதனால எனென பலன் சொல்லு.வாழ்க்கையில் சில முடிவுகள் கடந்து போனப்பிறகு அதை பிடிச்சிகிட்டு வருத்தப்படுவது சரியில்லை.இப்போ என்ன ஆகிடுச்சு எதுவும் மாறலையே.வாழ்க்கை ஓடிகிட்டு தானே இருக்கு.”
“இயல்பா சொல்ற செல்வி”
“இது எதார்த்தம் ப்ரபா.மனசாட்சியோட சொல்லு கடந்த அஞ்சு பத்து வருஷத்தில் எத்தனை முறை என் நினைப்பு வந்திருக்கும்.”
“நினைத்த பொழுதுகள் சில தான் செல்வி ஆனால் உன்னை மறக்கவே முடியலை.உன் தொடர்புக்காக நெட் எல்லாம் தேடினேன்.எங்கயும் நீ இல்லை.”
சிரித்தாள்.
“நான் அந்த மாதிரி சமூக தளங்களில் இல்லை ப்ரபா.நான் அந்த நிகழ்சமமான வாழ்க்கை வாழ விரும்பலை”
“ஏன் அப்படி சொல்ற.எத்தனை நண்பர்கள் திரும்ப கிடைச்சாங்க தெரியுமா.எத்தனை புது நண்பர்கள் தெரியுமா”
“ஓ..அதில் எத்தனை பேரை நேரில் சந்திச்சிருக்க ப்ரபா…எத்தனை பேர் கூட தினமும் அரைமணி செலவு பண்ற ப்ரபா.எத்தனை நண்பர்கள் சுகதுக்கம் உன்னை உண்மையா நெகிழ வைக்குது ப்ரபா…எத்தனை நண்பர்கள் பிறந்தநாள் அன்னைக்கு பேசிருப்ப”
உண்மையில் இதற்கு பதில் இல்லை தான் என்னிடம்.விழித்தேன்.
“அதை எல்லாம் விடு தினமும் உன் கூடவே நீ எத்தனை நேரம் செலவு பண்ணிருப்ப.இந்த உலகத்திலேயே உனக்கு நெருக்கமான உன்னிடமே நீ தொலைவா போகனுமா?.இன்டர்நெட் நிறைய கொடுக்குது.ஆனால் அது நம் மேன்மைக்கு தானே இருக்கனும் நம்மை தொலைப்பதற்கா?”
எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து நிற்பதாக தோன்றியது எனக்கு.
நீண்ட மௌனம்.
“ப்ரபா என்ன ஒன்னும் பேசலை நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா”
“இல்லை செல்வி….நீ சொன்னது என்னை பேச்சை அடக்கிடுச்சு.வாழ்க்கையில் எங்க இருக்கோம் என்ன பண்றோம்ன்னு தெரியலை புரியலை”
இப்போதும் புன்னகைத்தாள்.
“ப்ரபா இந்த மனித வாழ்க்கை மிக சிறிது.இதுல போட்டி போடறது எதை நோக்கின்னு சிந்திச்சு பாரேன்.சீக்கிரம் வாழனும்ன்னு நினைக்கிறது சீக்கிரம் முடிவு நோக்கின்னு படலை.அது கோமாளித்தனமா இல்ல.”
உண்மையில் எனக்கு அப்படி தான் இருந்தது.தலை அசைத்தேன்.
“ஒவ்வொரு நாளும் ஒரு அழகு.ஒவ்வொரு நேரமும்ஒரு புதையல் நமக்கு.அதை அனுபவிச்சு …சுகமோ துக்கமோ முழுசா அனுபவிச்சு வாழலாம் இல்ல.”
“ம்ம் ஆமா செல்வி.எப்படி இப்படி பேசற நீ என்ன தெளிவு.மனம் முழுக்க ஏதோ குழப்பம்.இப்போ தெளிஞ்சிருக்கு”
“முழுசா தெளிஞ்சா சரி….ஆமா ப்ரபா நீ நிறைய புத்தகம் வாசிப்பியே இப்பவும் அந்த பழக்கம் இருக்கா”
“இல்ல செல்வி.இப்ப எல்லாம் டிவி செல்போன் தான் பொழுதுபோக்கு.”
“முன்னம் எல்லாம் நீ தான் எனக்கு நிறைய படிக்க புத்தகம் கொடுப்ப நினைவிருக்கா..அதுல ஒரு புத்தகம் தான் உன் தூது புறா அது நினைவிருக்கா”
“நல்லா.அப்ப்பா அந்த லெட்டர் நீ படிச்சயா இல்லையான்னு நான் பட்ட வேதனை..அய்யய்யோ”
“அது அன்னைக்கே படிச்சிட்டேன்.ஏன் நேரில் சொல்ல மாட்டாரோன்னு ஒரு கோபம் தான்”
“அது சரி பசங்கல ஏங்க விடறது தானே பொண்ணுங்க வழக்கம்..உனக்கு சம்மதம்ன்னு நீயும் பதில் அனுப்பிருக்கலாம் இல்ல…ஒரு வருஷம் காக்க வச்சிட்ட”
“நேர்ல அன்னைக்கு சொல்லிருந்தா பதிலும் உடனே கடைச்சிருக்கும் இல்ல.நீ தான் அநாவசியமா நாள் கடத்திட்ட”
பழைய நினைவுகளில் சற்று திளைத்து வந்தோம்.நாங்கள் போட்ட சண்டைகள் கொஞ்சிய நாட்கள்..மீண்டும் ஒரு முறை காதல் நாட்களில் வாழ்ந்து வந்தோம்.மனம் இறகாக ஆயிற்று.
“செல்வி வாழ்க்கை அழகா தெரியுது”
“ஆமா ப்ரபா .வாழ்க்கை அழகு தான்.நமக்குள்ள எத்தனை நினைவுகள் பார்த்தியா.நீ சொன்னது போல என் தொடர்பு உனக்கிருந்திருந்தா இந்த நாள் இல்லாம போயிருக்கும்.இந்த சந்தோஷம் கிடைக்காம போயிருக்கும்”
“இல்ல செல்வி இது தினமும் கிடைத்திருக்கும்”
அவள் சிரித்துக்கொண்டாள்.அவள் அலைபேசி அழைத்தது.
“ப்ரபா நேரம் போனதே தெரியலை.நான் கிளம்பனும்.”
“அதுக்குள்ள என்ன.சரி உன் நம்பர் கொடு.அப்புறம் பேசலாம்”
என்ன நினைத்தாளோ சற்று பலமாகவே சிரித்துக்கொண்டாள்.தன் பையிலிருந்து ஒரு பழுப்பு கவர் எடுத்து கொடுத்தாள்.
“ப்ரபா..இது உனக்கு.என் சுய விலாசம் இது.மறுபடி இப்படி சந்திக்கனும்னு ஆசை தான்.பார்க்கலாம்.நான் வரேன் ப்ரபா”
கைக்குலுக்கலுடன் முடிவுபெற்றது அந்த சந்திப்பு.மணிப்பார்க்க அலைபேசி எடுத்ததில் சுற்றிக்கொண்டது பலநூறு வளைகள்.
அவளின் சந்திப்பில் நான் பெற்ற உற்சாத்தோடு பயணப்பட்டுக்கொண்டிருந்தேன்.
வீடு திரும்பியதும் மீண்டும் ஒரு சுழற்ச்சியில் வீழ்ந்தேன்.திடீரேன்று ஒரு நாள் என் மனைவி என்னிடம் வந்து
“இது எங்க கிடைச்சதுங்க புத்தகம். அற்புதமா இருக்கு.படிக்கபடிக்க சுவாரஸ்யா இருக்கு.எந்த சூழ்நிலையிலும் இதை படிக்கலாம் போல”
அவள் காட்டிய புத்தகம் என் சிந்தனை எழுப்ப
“எங்க இருந்தது இது.எப்ப எடுத்த”பதட்டத்துடன் நான் கேட்க
“உங்க கார்ல தான் கிட்டதட்ட இரண்டு மாசம் இருக்கும்..ஏன் இப்படி பதறீங்க.வேற யாருடையதோ வா”
இது அவள் கொடுத்தது தான்.செல்வி.அவசரமாய் அதை திருப்பி திருப்பி பார்த்தேன்.இன்னும் அச்சு ஏறாத முதல் ப்ரதி.முதல் பக்கம்
“என் சுயம் தேடுதலில் வித்திட்ட என் அன்பு ப்ரபாவிற்கு இது சமர்பணம்”
என் கண்கள் கலங்கியது.எங்கோ எப்போதோ எங்க பழக்கத்தின் போது நான் சொன்னவார்த்தைகள் அவள் எப்படி தன் நெஞ்சில் இறக்கி நிமிர்ந்துவிட்டாள்.நான் இன்று என் சுயம் தேய்ந்து செக்குமாடாய் ஓடி உண்மை சந்தோஷம் தொலைத்து அல்லல் படுகிறேன்.
மெதுவாய் அந்த புத்தகம் புரட்ட ஆரம்பித்தேன்.தடம்புரண்ட என் வாழ்க்கை சீராவதாய் உணர்ந்தேன்.ஒவ்வொரு நாளும் அழகானது.என் மகளின் பாசம் புரிந்தது.என் மனைவியின் காதல் புரிந்தது.என் உற்ற தோழமைகள் யாரென புரிந்தது.எனக்கான ஒரு நேரம் நிறைவாய் கிடைத்தது.மறுமுறை என் செல்வியை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்க பழகினேன்.இந்த காத்திருத்தல் கூட இன்று இனிமையாய் பட்டது
அந்த புத்தகம் இன்றுவரை அச்சில் வரவில்லை. வந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.புத்தகம் பெயர்
“வாழ்வோடு வாழ்ந்து விடு”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக