ஒரு நாள் நான் இப்படி
நடந்து செல்கையில் ஒரு மரத்தின் கொம்பொன்று என் தலைமேல் ‘தொப்’ என்று விழுந்தது.
தலையை தடவியபடி கீழே விழுந்த கொம்பை எடுத்தேன். எந்த
மரத்தினுடையது என்று தலைத்தூக்கிப் பார்த்தேன்.
அது அங்கிருந்த எந்த மரத்துடனுடையதாகவும்
இல்லை. ஆச்சரியம் மேலிட அந்த கொம்பை உற்று நோக்கினேன். பார்ப்பதற்கு
சாதாரண கொம்பாய் தான் இருந்தது.
சுமார் ஒன்னறை அடி நீளம். கருப்பில் வெள்ளை கோடா..வெள்ளியில் கருப்பா..கருப்பும் வெள்ளையுமாய் நிறம். நன்றாய் தான்
இருக்கிறது ஆனால் என்ன
பயன். அதைத் தூக்கி எறிய நினைத்தேன். ஏனோ மனம் வரவில்லை. சரி
தான் வீட்டிற்கு எடுத்து சென்றால் எதற்காவது பயன்படும் என்று அதை கையில்
எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.
எதிரில் என்
வெகுநாள் நண்பர் வந்தார்.
பார்த்து பல நாள் ஆயிற்று.
"என்ன சந்தானம் எப்படி
இருக்கீங்க...எங்க ஆளக்காணோம்"
"அது ஏன் கேட்கறீங்க ஊருக்கு
போனேன். உறவுக்காரங்க பஞ்சாயத்து. என்னமோ உறவு எல்லாம் பாசாங்கா இருக்கு. காலம்
சரியில்லைங்க"
"உறவுகள்ன்னா அப்படி தான். எல்லா
விரலும் ஒரு மாதிரியா இருக்கு.
அதவிடுங்க உங்க பையன் கல்யாண விசயம் என்ன
ஆச்சு. அமைஞ்சதா? ஏன் கேட்கறேன்னா, என் மனைவியோட
சிநேகிதி பொண்ணு ஒன்னு இருக்கு.
நல்ல குணம் நல்ல படிப்பு. சுட்டி. ஜாதகம்
ஒத்து வருதான்னு பார்க்கலாம்ன்னு தான்"
"நல்லதுங்க. எங்கயும் இதுவரை
அமையலை. அந்த பொண்ணு ஜாதகம் வாங்கி கொடுங்க. பார்க்கலாம். உங்க
மூலம் நல்லது நடந்தா சரி தான்"
"நீங்க ஒன்னும் அந்த மனுஷாள
பார்க்க வேண்டாமா..யார் எவர்ன்னு கூட கேட்க மாட்றீங்க?"
"நீங்க எனக்கு நல்லது
தானே நினைப்பீங்க. உங்களுக்கு மனசுல பட்டா சரியா தான் இருக்கும்"
"அதுசரி. இருந்தாலும்
நீங்க அவங்கள பார்த்தா நல்லாயிருக்கும். மத்தது அப்புறம் பேசிக்கலாம்"
சொல்லிக் கொண்டிருக்கும்போதே
எதிர்திசையில் என் மனைவியின் தோழியின்
கணவர் வந்து கொண்டிருந்தார்.
"அட நீங்க எங்க இங்க இப்பதான்
உங்கள பத்தி பேசிட்டிருந்தேன்.
இவர் தான் என் நண்பர் சந்தானம்.சந்தானம் இவர்
பரமசிவம்...நான் சொன்னேன்ல அவர் தான்"
"என்னை பத்தியா என்ன சமாச்சாரம். எப்பவும்
அந்த பார்க் பக்கம் வாக்கிங் போவேன் இன்னைக்கு இப்படி போலாமேன்னு தோணிச்சு
அதான்" இது பரமசிவம்.
"நேரா விஷயத்துக்கு வரேன். இவர்
பையனுக்கு பெண் பார்க்கிறாங்க.
அதான் உங்க பொண்ணு பத்தி சொல்லிட்டு இருந்தேன். உங்களை
அறிமுகப்படுத்திட்டேன்.
இனி நீங்க பேசிக்கோங்க...அப்புறம்
பார்க்கிறேன்"
ஏதோ சாதித்த சந்தோஷத்தில் அங்கிருந்து
பறப்பட்டேன். திரும்பிப்பார்த்தேன் தூரத்தில் அவர்கள் இருவரும் சிரித்து பேசுவது
கண்ணில் பட்டது. புன்னகைத்துக்
கொண்டேன்.
சிறிது தூரம்
சென்றதும் காலில் கல் ஏதோ குத்தியதும் சிறிது இரத்தம் வந்தது. எங்கிருந்து
வந்ததோ கோபம். அந்த கல்லை கையிலிருந்த கொம்பால் பலமாக
அடித்தேன். கை வலித்தது
தான் மிச்சம். அங்கிருந்த ஒரு இருக்கையில் அமரந்தபடி காலை பிடித்துக்கொண்டு
அமர்ந்தேன். என்னை பலரும் தாண்டிச்
சென்றனர். ஒருத்தராவது
என்னை கவனிக்கவில்லை.
என்ன மனுஷங்களோ. ஒருத்தன் கால்ல
இரத்தம் வர உக்காந்திருக்கான் எனக்கென்னன்னு போறானுங்க. கலிகாலம்.. கேட்பாரில்ல.
அதோ போறான் பாரு தினமும் அவ பின்னாடி போறது தான் வேலை என்னவோ காதல்
கத்திரிக்காய்ன்னு ஒரு நாள் அவ ஒரு அறை கொடுத்தா தான் அடங்கபபோறான்.
இந்த மவராசி
வாக்கிங் வருதா வம்பளக்க வருதா..எப்பப்பாரு மருமவள வசை பாடுறது தான் வேலை. பாவம்
அது சாது. இதுக்கெல்லாம் டக்குன்னு ஒரு பக்கம் வலிப்பு வந்தா தெரியும். யார்
கவனிப்பாங்கன்னு
வந்துட்டான்
ஜோல்னா பையோட. கவிதை கதை
உபதேசம் விரக்தி ஆன்மீகம்னுட்டு. வயசான காலத்துல
போட்டத தின்னுட்டு சிவசிவா ன்னு கிடக்காம. வீட்டிலேயே தனி ரூம் தனி குடித்தனம். பென்ஷன்
வர திமிரு. இவனல்லாம் தனிமரமா விடனும். சாப்பாடு கூட இல்லாம.
ச்சை என்ன உலகம்
எல்லாம் நாடகம். எவன் கண்டான் எனக்கு என்னவோ. என் புள்ளயாண்டானுக்கு வரப்போறவ
எப்படியோ. அடடா போயும் போய் அந்த சந்தானம் மகனுக்கு அந்த பொண்ண பார்க்க
சொல்லிருக்கேனே. முட்டாள்த்தனம்.
ஏன் என் பையனுக்கு பார்க்கனும்ன்னு தோனல. ச்ச
ச்ச அந்த பொண்ணு நம்ம பொண்ணு மாதிரி தானே பார்த்திருக்கோம். இருந்தா
என்ன மருமவளா வந்தாளும் பொண்ணு தானே. இவனுங்க வேற சிரிச்சு சிரிச்ச
பேசிட்டிருந்தானுங்க.
எப்படியாவது இது நின்னுட்டா பரவாயில்ல.
என்ன என்ன ஒரே
கூச்சல் குழப்பம். தூரத்தில் ஒரு பெருங்கூட்டம். கூச்சல். எழுந்த பார்க்க
ஓடினேன். அந்த வாலிபன் தர்ம அடி வாங்கிக்கொண்டிருந்தான்.
"ஏங்க அந்த புள்ளைய இப்படி
அடிக்கிறாங்க"
"புள்ளையா...சரியான தருதல...அந்த
பொண்ணுகிட்ட இந்த பப்ளிக்ல தகாதமுறையில நடந்தா பார்த்துட்டு சும்மாவா
இருப்பாங்க"
"அதுசரி பார்த்து அடி பலமானா
ஏதாவது ஆகிட போகுது.
பாவம். திருந்திடுவான். விடுங்க"
"வந்துருவீங்க போங்க சார்."
பெரியவங்களுக்கு
மரியாதையே இல்ல. ம்ம்ம்....அய்யய்யோ...ஹலோ சார் சார் இங்க கொஞ்சம் வாங்க அந்தம்மாக்கு
ஏதோ போல இருக்கு...வலிப்பு மாதிரி தெரியுது. வாங்க
வாங்க.."
கூட்டமாக சிலர்
ஓடி வந்து ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்து அந்த அம்மாளின் மருமகளுக்கு தெரிவித்து. எல்லாம் கன
நேரத்தில்.
அப்பாடா
எப்படியோ பாவம் அந்தம்மா சரியான நேரத்துல காப்பாற்றியாச்சுன்னு நம்பறேன். அருகில்
இருந்த அந்த ஜோல்னாபை
காரர்
"அந்தம்மா வா அது வாய திறந்தா
நல்லதே வராதுங்க. எப்பவும் மருமவள அப்படி பேசும். கடவுள்
இருக்கான் சார். இவங்க மாதிரி ஆளுக்கு இது சரிதான்"
"அப்ப உங்கள மாதிரி
ஆளுக்கு?" குரல் கேட்டு திரும்பினேன். இளைஞன் ஒருவன் கோபம் கொந்தளிக்க
நின்றிருந்தான்.
"என்ன அப்பா பார்க்கறீங்க..ஊர்ல
இருக்கிறவங்க கதையெல்லாம் நல்லா பேசுவீங்க உங்க கதை எப்படி. முதல்ல நீங்க
எப்படின்னு அலசுங்க அப்புறம் மத்தவங்கள பத்தி பேசலாம். உங்ககிட்ட பேசி
ப்ரயோஜம் என்ன. நானும் என் மனைவியும் கிளமப்றோம். இனி உங்க கூட
இருக்க விரும்பல. எங்க போறோம்ன்னு கூட உங்களுக்கு தெரியவேண்டாம்ன்னு தான் நினைச்சேன். வீட்டு
சாவி கொடுக்க வந்தேன்”. சாவியை அவர் முகத்தில் வீசிவிட்டு சென்றான்.
அவன் போன திசை பார்த்து விழித்தார். ஆதரவாக
அவர் தோள் தொட்டேன்.
அதை தள்ளிவிட்டு விறுவிறு என்று நடந்தார். பாவம்
அவர்.
"அங்கிள்
உங்க கால்ல இரத்தம்.
இந்தாங்க தண்ணி வாஷ் பண்ணுங்க. பேன்டெய்ட்
இந்தாங்க". சிறுவன் ஒருவன் நீட்டினான். என்ன
அழகான புன்னகை அவனுடையது.
இனிமையான கனிவான குரல். அவன் கொடுத்த
தண்ணீரை ஊற்றிக்கொண்டு பேன்டெய்ட் ஒட்டிக்கொண்டேன். நன்றி சொல்ல
திரும்பினேன். அவனைக் காணவில்லை.
ஒரு கனம் வியந்தேன். மறுபடி
இருக்கையில் அமர்ந்தேன்.
அலைபேசி அலறியது. சந்தானம்.
"என்ன சந்தானம்."
"என்னவா...பரமசிவம்ன்னு ஒருத்தர்
அறிமுகப்படுத்திநீங்களே...அவர் பொண்ணு யாரையோ காதலிக்கிறாளாம்..அவருக்கு தான் இவர்
தருவாராம். உங்களுக்கும் தெரியுமங்கறாரு.
இப்படி மாட்டிவிட்டீங்களே. சரியில்லைங்க. இனி
என் பையன் விஷயமா எதுவும் பேசாதீங்க."
டொக் என்று வைத்தார். எதுவும்
புரியாமல் விழித்தேன்.
குழப்பத்துடனேயே வீட்டினுள் நுழைந்தேன். அங்கு
அந்த பெண். அவள் அப்பா பரமசிவம்.
உடன் என் மகன்.
விஷயம் ஒருவாரு சொல்லிமுடித்தார்கள். நான்
எதிர்பார்க்காத நிகழ்வு.
என் பெண்ணாக நான் நினைத்தவளே என் மருமகளாக. மகிழ்ச்சி
தான். திருமணம் தேதி குறித்தாயிற்று.
வேண்டுதல் நிறைவேற்ற கோயில் சென்று
வந்த என் மனைவி என்றைக்கும்
இல்லாமல் படபடத்தபடி வந்து கொண்டிருந்தாள்.
"என்னம்மா ஒரு மாதிரி இருக்க. உடம்புக்கு
முடியலையா"
"உடம்புக்கு என்ன. ஒன்னுமில்ல. வயசாச்சுன்னா
இப்படி தான். காலு வேற வலி உயிர்ப்போகுது.
வெய்யல் எப்டி காயுது. கோவில் படியிலயே தடுக்கி
வேற விழுந்துட்டேன்”
“அச்சச்சோ
என்னாச்சு மா..அடி எதும் படலையே”
“பட்டா
மட்டும்..போங்க கிடக்கு..ஒன்னும் ஆகல..எல்லா வேலையும் நானே தான செய்யனும். பொம்பளைங்களுக்கு
ஓய்வு இருக்கா”
"அதுக்கென்ன கொஞ்சநாள்ல மருமக
வந்திருவா. உன் பாரம் கொறையத்தான் போகுது"
"ஆமா என்னத்த கொறையும். அவ பை
மாட்டிகிட்டு புருசனோட ஜோடி போட்டு வேலைக்கு பேயிருவா. அவளுக்கும்
சேர்த்து வேலை செய்யனும்.
வீட்டோட சமயல்காரி. அப்புறம் புள்ள
பொறப்பு அதை வளர்க்கனும்.
என்னவோ என் ஜென்மா"
ஒரு நாளும் இப்படி பேசுபவள் அல்ல என்
மனைவி. இன்று என்ன ஆயிற்று.
ஒன்றும் புரியவில்லை. சரி சமையல்
அறையில் உதவலாம் என்று சென்றேன்.
குளிர்ப்பெட்டி மேல் ஒரு கொம்பு. ஆம்
அதே கொம்பு.
"ஏம்மா இந்த கொம்பு
எங்கிருந்து"
"கோயில்ல என் தலையில விழுந்தது. தூக்கி போட
மனசில்ல அதான் கொண்டுவந்தேன்.
ஏன்"
"ஒன்னுமில்ல.சும்மா
கேட்டேன்". கருப்பில் வெள்ளையா வெள்ளையில் கருப்பா. அதே குழப்பம்
இப்போதும். அன்று எப்படி தன் கைவிட்டு போனது இது என்றே புரிபடவில்லை.
கையில் எடுத்தேன். வாசலில்
ஒரு குரல்
"அம்மா அம்மா"
வந்து பார்த்தால் ஒரு சிறுவன். அவனா
இவன். அவனைப்போல் தான் இருந்தான். திருதிரு வென விழித்தேன்.
"அய்யா..அம்மா கோயில்ல இருந்து ஒரு
கொம்பு கொண்டாந்தாங்க..அது என்னுடையது. விளையாடும் போது தவறுதலா போட்டுட்டேன். கருப்பும் வெள்ளையுமா இருக்கும். அதோ அதாங்க உங்க
கையில் இருக்குதுதே அதே தான்"
எதுவும் புரியாமல் மந்திரித்தவன் போல் அவன்
கையில் அந்த கொம்பை கொடுத்தேன்.
“ஏன்
ப்பா இது கருப்புல வெள்ளையா வெள்ளையில கருப்பா”
“கருப்பும்
வெள்ளையும் கலந்தது தானுங்க..பார்க்கற பார்வைக்கு வெள்ளையோ கருப்போ
முதன்மையா தெரியுது..ரெண்டுதுக்கும் இடையில சாம்பல் நிறம் கூட
உண்டுங்க”
என் கையிலிருந்து வாங்கிக்கொண்டு
சிட்டாய் பறந்தான். கொஞ்ச தூரம் தள்ளி சென்று திரும்பி சிரித்தான்.
அவன் சாம்பல்
நிறக் கையில் அந்த கொம்பை வேகமாய் சுழற்றிக்கொண்டே
ஓடினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக