காதல் வலி
பட்டாடை உடுத்தி கொண்டேன்
பொன்நகைகள் பூட்டிக்கொண்டேன்
தோழிமார் சூழ மேடையும் ஏறிவிட்டேன்
நண்பனாய் நுழைந்து
காதலாய் கலந்து விட்ட கண்ணாளா
உம்மைத்தான் கண்களால் தேடுகின்றேன்
காதலால் கரைகின்றேன்
மணமகளாய் நான் மேடையேற
மணமகனாய் நீர் வேண்டுமென்று
புதுசட்டை பையில் காகிதம் கண்டீரோ
ஒருதலை காதல் என்று கிழித்து போட்டீரோ
தூதாய் நான் கொடுத்த புத்தாடை போட்டுவந்து
துரிதமாய் எனை கொண்டள்ளி போவீர் என்று
கனவு பல கண்டுவிட்டேன்
பகல் கனவு தான் கண்டுவிட்டேன்
இன்னொருவர் மாலை ஏற்கும் இந்நேரம்
இனியவரே நீர் மட்டும் இல்லாமல் போனீரே
சிற்பமாய் சிரித்திருந்த என்னை காதல் வலியால்
கல்லாய் செய்தீரே
சொல்லாத காதல் எல்லாம் சுமையாய்த்தான்
போகுமென்று அறிந்து கொண்டேன்
இல்லாத காதலோடு இல்லறம் நடத்தத்தான்
கழுத்தில் தாலியும் ஏற்றுக்கொண்டேன்
மண்டப வாசலில் யாரது நீர் தானோ!
உம் கண்ணில் கண்ணீர் துளி தானோ!
என் விதியே!என் செய்வேன்
என் விதியே என் செய்வேன்
என்னை வாழ்த்தி நிற்கும் தெய்வங்காள்
வரம் ஒன்று வேண்டுகின்றேன்
அவருக்கும் காதல் எனில்
அந்த காதல் காகிதம் தான்
அவர் கையில் என்றும் கிடைக்காமல் போகட்டும்