நான் இந்த வீட்டில் நுழைந்த அன்று தான் அவளும் நுழைந்தாள். அலங்கார கோலத்தில் இருவரும் ஜொலிப்பதாக பலரும் பேசிக்கொண்டார்கள். அதன்பின் ஒவ்வொரு நாளும் அவளுடன். இன்று வரை அவளுடன். விரைந்தே போனது காலம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது முதல் நாள் என்னுடன் அவள் செய்த முதல் பயணம். அன்று அவள் ஒரு அழகி என்ற நினைவு மட்டுமே. இன்று அந்த நாள் ஒரு தேவதையின் ஊர்வலமாய் நெஞ்சில் உலா வருகிறது. திருமண நாள் தந்த கலைப்பில் மறுவீடு போகும் வரை என்னுடன் அப்படி ஒரு ஆழ்ந்த தூக்கம் கொண்டாள். தூங்கும் மலரை அன்று தான் அருகில் பார்த்தேன். அன்று அறியவில்லை அவள் என்னுள் இப்படி இழைந்து போவாள் என்று.
அன்று முதல் அவளை அலுவலம், வெளியூர்,புகுந்தவீடு என்று தினமும் கூட்டிச் சென்றேன். அது ஒரு மகிழ்ச்சியாகவே இருந்தது எனக்கு. தினமும் காலையில் வாசலில் கோலம் போட வருபவள் என் மேல் இருக்கும் இலைகளை கலைந்து என் கண்ணாடி துடைத்து புத்துயிர் ஊட்டிச் செல்வாள். நாட்கள் செல்ல செல்ல என்னைப் பார்த்து புன்னகைக்க துவங்கினாள். ஜடமான நான் தவணை முறையில் உயிர் பெற்றேன். அவளின் சிரிப்பு அவளது அழுகை அவளது கோபம் அவளது சோகம் அனைத்தும் பக்கம்இருந்து பார்த்திருந்தேன்.
அவளின் முதல் பிரிவு என்னை சற்று பாதித்தது. பழகிய சில நாட்களிலையே எங்கள் இருவருக்கும் ஏதோ ஒரு அன்பு நூல் நூற்க்கப்பட்டது. ஒரு வருட இடைவெளிக்கு பிறகு
மீண்டும் அவளை சந்தித்த அன்று நான் மறுமுறை புதுபொலிவுடன் உயிர்ப்பெற்றேன். மறுபடி என் வேலை தொடர அவளின் ஸ்பரிசத்தில் நாளும் மெருகு பெற்றேன். அவளின் செல்ல பிள்ளையாகவே மாறிப் போனேன். என் மேல் சிறு துரும்பு என்றாலும் முதலில் அதை அகற்றும் கை அவளுடையது. அறியாமல் ஒண்டிரண்டு அடி வாங்கிய போதெல்லாம் அவள் கலங்கியது வியப்பளித்தது எனக்கு.
எத்தனையோ முறை என்னை விட வசதியான அழகான ஒன்றை வாங்கச் சொல்லி கோரிக்கைகள் வந்த போதும் அறிவுரைகள் வந்த போதும் அதெல்லாம் காதில் ஏற்காமல் என்னையே விரும்பினாள். அவளின் ஒரு சோகம் மட்டுமே என்னை மிக பாதித்தது. ஒவ்வோரு முறை மருத்துவமனை செல்லும் போதும் அவள் கண்கள் குளமாகின. ஒரு மழலைக்கான அவளது ஏக்கம் பெரிதும் பாதித்தது என்னையும். அந்த நேரங்களில் கடவுளை நொந்து கொண்டேன். என்னை ஒரு உயிராக படைத்திருந்தால் அவள் வயிற்றில் மலர்நதிருப்பேன் என்று. என் தேவதை அழுகை நிறுத்த முடியாமல் தவித்தேன்.
வேண்டுதல்கள் நிறைவேறியது அழகான இரட்டைக்கு அன்னையானாள். குழந்தை சுமக்கும் ஒரு பெண்ணின் பொலிவு சொல்லில் அடங்காது. அன்று இரவு அவள் குழந்தகள் இந்தபூமி தொடும் இரவு, பனிகுடம் உடைந்த வேகதத்தில் அவள் பரபரக்க நள்ளிரவு வேளை என்பதில் அவள் கணவன் படபடக்க அவர் கால் அழுத்தம் விடவும் விரைவாய மருத்துவமனை சென்றடைநத்தேன். என்ன ஆயிற்று என்று இரவெல்லாம் காத்திருந்தேன். சுகமாய் இரு செல்வங்கள் பெற்றெடுத்தாள் என்பதில் மிக்க மகிழ்ச்சி கொண்டேன். அன்றையிலிருந்து என் தேவதையின் பிஞ்சுகளையும் சேர்ந்து சுமந்தேன். அவர்களது அழுகைகள் தூக்கம் கலுக் சிரிப்புகள் எல்லாம் கண்டு மகிழந்தேன். இப்போதெல்லாம் அவள் மாறிவிட்டாள். திடீரென்று என்னை தடவுகிறாள். என்னை பார்க்கும் போதெல்லாம் ஆசையாய் தீண்டுகிறாள். என்னுடன் ஏதோ கண்களால் பேசுகிறாள். பல சமயங்களில் என்னை நேசிப்பதாய் சொல்கிறாள். குழந்தையாய் என்னை கிள்ளி முத்தமிடுகிறாள். தாயான பின் என்னையும் சேய் ஆக்கி மகிழ்கிறாள்.
அதன் பின் எத்தனையோ ஏற்ற இரக்கங்கள் வாழ்வில் வர சிலவற்றை என்னுடன் பகிரவும் செய்கிறாள். அவ்வப்போது என்னை சரியாக பராமறிக்க முடியவில்லை என மன்னிப்பு கூட கேட்கிறாள். சில நாள் நான் என் மருத்துவமனை சென்று திரும்புகையில் கண்களால் அள்ளிக்கொள்கிறாள். இரு கை நீட்டி என்னை அணைத்துக்கொள்கிறாள். அவள் கண்ணில் அந்த அன்பு அது தான் எனக்கு புது தெம்பு. கணவனுக்காய் காத்திருக்கும் நாளில் அவனுடன் வரும் என்னை என்றுமே கவனிக்க மறந்ததில்லை. அவள் அன்பு வீசும் கண்கள் காண நானும் மறந்ததில்லை. இப்போது என்னுள் அமரும் ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்கிறாள். நன்றி சொல்கிறாள். உயிர் உள்ள உயிராகவே பார்க்கிறாள்.
. பண்ணிரண்டு வருடம் கழித்து கூட அவள் பிள்ளைகளிடம் நான் தான் அவள் செல்லப்பிள்ளை என்கிறாள். அவளைப்போலவே அவளது பிள்ளைகளும் என்னை கொண்டாடி மகிழ்கின்றனர்,நேசம் அள்ளித்தருகின்றனர். வாசலில் நின்றாலும் அவள் மனத்தில் வாழ்வது என்றுமே எனக்கொரு மகிழ்ச்சியே.
இதோ இன்று நான் விடைபெறும் நாள். வாழ்க்கையின்
சுழற்சியில் யாரும் சுழலத்தானே வேண்டும். அதில் நானும் அவளும்
விதிவிலக்கல்லவே. நேற்று என்னுள் அமர்ந்து விக்கிவிக்கி அழுததை
நினைத்தாலும் இன்ஜின் படபடக்கிறது. உன்ன விடக்கூடாது தான் டா.
எனக்கு வேற வழி தெரில. உன்ன ரொம்ப தேடுவேன்.
உன் ஊருக்கு தான் நீ போகப்போற. உன்ன அவங்களும்
கவனிச்சுப்பாங்க. உன்னால முடிஞ்ச வரைக்கும் இருந்துடு.
உழைச்சிடு. என்னென்னவோ சமாதானங்கள். அவளுக்கு அவளே சொல்லிக் கொள்கிறாள்.
இருக்கும் வரை இருந்துவிட்டு நேரம் வந்தால் கிளம்புவது தானே இங்க
எல்லாம். ஏற்க தான் மனம் வேண்டும். இதோ
அவள் முகம் என் கண்ணாடியில் விலகி விலகி சின்னதாகி….. மறைந்துவிட்டது.
இனி என் பயணங்கள் வேறு திசையில். அவள் நினைப்பில்
என்றும் நான் இருப்பேன். என் உருவமாயும் அருவமாயும் அவளே இருப்பாள்.
காரணம் வெற்று கூடான என்னை மகிழ்வுந்து ஆக்கியவள் அவள் தானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக