புதன், 1 ஜூலை, 2026

உனக்கோர் கடிதம் தோழி

 

 

உனக்கோர் கடிதம் தோழி

***************************

 

 

இனிமையானதொரு காலைநேரம்.இடியும் மின்னலுமாய் ஆர்ப்பரிந்துவிட்டு மேகங்கள் தஙகளுள் சமரசம்செய்துகொண்டு தூரல் தூவ ஆரம்பித்தது. அழகாய் மெல்லியதாய் சீராய் சலனமில்லாமல் மழை பொழிந்தது.இந்த இதமான சாரலை யார்தான் இரசிக்கமாட்டார்கள்.அதுவும் ஜன்னல் ஓரம் சூடானத் தேநீர் இளையராஜாவின் மெல்லிசை,மனத்திலும் மழை தான்.அப்படி தான் பாரதியும் ஜன்னல் சாரலில் நனைந்தபடி தேநீர் கோப்பையுடன் அமர்ந்திருந்தாள்.இந்த மாதிரி ஒருசூழல் தான் அவள் பெரிதும் விரும்புவது.காலையில் பம்பரமாய் சுழன்று கணவன் குழந்தைகள் கவனித்த பின், தனக்கான நேரமாய் செலவிடும் சில மணித்துளிகள்.அதிலும் அவள் பெரிதும் நேசிக்கும் மழைநாள்.ஜன்னல் சாரல்.மெலல்லிசை.

 

அவள் முகத்தில்ஏதோ ஒரு நிறைவு.சிறு வருத்தம்.அவள் மீன் போன்ற கண்ணோரத்தில் ஒரு சிறுதுளி .நெஞ்சுக்குள் எதையோ மென்றுவிழுங்கினாள்.ஜன்னல் ஒட்டி போடபபட்ட மேஜையின் மேல் படபடக்கும் காகிதங்கள். அப்போது தான் பேனாவால் ஈரமாக்கப்பட்ட எழுத்துக்கள காற்று உலர்த்திக் கொண்டிருந்தது.யாரை நோக்கி பறக்க ஆயத்தமாகின்றன இந்த காகித புறாக்கள்?பாரதியின் கண்ணீர் துளியின் காரணம் தான் என்ன?ஆனால் அவள் முகத்தில் ஏதோ அமைதி.தன் பாரங்களை இந்த காகிதத்தில் இறக்கிவிட்டுத் தன் கண்ணீர் துளியால் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாள் போலும்.

 

பிறர் கடிதம் படிப்பது அநாகரீகம் தான்.ஆனால் பாரதி நம்மவள். அவள் உள்ளம் உறுத்தியது எது.இன்று அமைதியும் பாரமும் ஒன்றாக னென்று அறிய வேண்டாமா.படபடக்கும் அந்த காகிதத்தை சற்று நிறுத்தி படிக்கமுயல்வோம்.

 

என் அன்புத்தோழிக்கு

என் உயிர் சிநேகித்திக்கு

ப்ரியமான வள்ளிக்கு

 

இந்த கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை எனக்கு.நீ இன்னமும் என் தோழியா?என் மீது உனக்கு பிரியம் உள்ளதா?தெரியவில்லை.ஆனால் இன்னமும் நான் உன்னை சிநேகிக்கிறேன் வள்ளி.என் மனத்தில் இழைந்துபோன ஒரு உருவம் நீ.நேற்றே உன்னை கோயிலில் பார்த்த போது என்னையறியாமல் ஒரு உற்சாகம். ன்னை கட்டியணைக்க ஓடி வந்தேன்.ஆனால் உன் கண்ணில் அந்த நட்பு இல்லை மாறாக ஒருகுழப்பம் கலக்கம்.ஏன்?என் வள்ளியை நான் பார்க்கவில்லை.பொங்கிய அன்பிற்கு தடையிட்டேன்.உன்னைப்போலவே நானும் சமப்பிதாய கேள்விகளோடு விடைபெற்றேன்.

 

வீடு திரும்பிய எனக்கு உறுத்தல்.எத்தனை ஆண்டுகள் ஏறத்தாழ இருபது வருடம் பின்பு சந்தித்தோம்.அடையாளமும் கண்டுகொண்டோம்.பின்பு ஏன் விலகி நின்றோம்.என் மனத்தின் ஏக்கம் உனக்கில்லையா.இதயம் கனக்குதடி வள்ளி.இரட்டை ஜடை மயில் நீ.நீ சிரிக்கும்போது கண்கள் மின்னும்.உன் தாவணி உன் மேல் பட்டதாலேயே காற்றில் ஆனந்த கூத்தாடும்.உன்னை சுற்றி எப்போதுமே சிரிப்பொலி. பொலிவு.உன் நட்புக்காக உன் அருகாமைக்காக பலர் காத்திருக்க நீ என் கை கோர்த்து என்தோளில் கை போட்டு என் பாரதிஎன்று நடக்க என்னுள் எத்தனை மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் தெரியுமா.இன்றும் நான் அதே பாரதி தான் வள்ளி.

என்று தொடங்கியது நம் நட்பு.ஒரே ஊரில் ஒரே நாளில் ஒரே இடத்தில் பிறந்த அன்றா?உன் அன்னையும் என் அன்னையும் வித்தியாசம் பாராமல் நம்மை வளர்த்த விதத்திலா?பள்ளி முதல் நாள் தொடங்கி அன்று பிரிய நேர்ந்தது வரை எல்லாவற்றிலும் பயணித்த போதா?விளங்கவில்லை.ஆனால் நம் பிரிவுக்கு பின்னும் ன் கைக்கோர்க்க உன் தோழியாக ஏங்கிய ஏக்கம் இன்றுவரை, இன்னமும என் நெஞ்சில் கனன்று கொணட்டிருக்கிறது வள்ளி.

 

விவரம் அறியா வயதில் சிறுசிறு ண்டைகள் மூண்டாலும் அதிலிருந்து நம்மை மீட்டு, மீண்டும் திடமாய் நாம் கட்டிக்கொண்ட நட்புக்கோட்டை ன்று ஆளில்லாமல் வெறும் கூடாய் கிடக்கிறது.இன்று விவரங்கள் பல அறிகிறோம்.ஒற்றை வார்த்தையிலேயே நம் இடைவெளி குறையக்கூடும் ஆனால் ஏனோ மௌனமாய் அலைகிறோம்.

உனக்கு நினைவிருக்கிறதா வள்ளி, பள்ளி செலலும் போதும் வீடு திரும்பும் போதும் நம் கைக்கோர்த்துக்கொண்டு அந்தசின்ன பாலம் கடப்போம்.வழியில் தெரியும் காட்டுப்பூக்களை உனக்காக நானும் எனக்காக நீயும் பறித்துக்கொடுப்போம்.நமக்குள் சண்டைகள் மூண்டாலும் மதிய உணவு மட்டும் நாம் இருவர் மட்டும் னியாக உண்போம்.எத்தனையோ முறை நம் சண்டைகள் சமாதானமானது அப்போது தான்.உன் பலத்தையும் என் பலத்தையும் ஒப்பிட்டு மகிழ்ந்தோம்.உனக்காக நான் பாடுவதும் அதற்கு நீ ஆடுவதும் கண்டு பொறாமை அடைந்தோர் பலர்.ஆனால் அவர்களால் நம்மை பிரிக்க இயன்றதில்லை.

 

 நம் ஒறறுமை பார்த்து ஊரே சிரித்தது அன்று தான்.ஆம் நாம் இருவரும் பெரிய மனுஷி ஆன ஆன்று.அன்று நமக்கு இருந்த தனிமையில் நாம் அடித்த வம்புகள் ஆறுதல் சொல்லிக்கொண்ட வலியான பொழுதுகள் என்றும் நெஞசில் நிற்கும் வள்ளி. நீ வேறு நான் வேறு என்று என்றுமே எனக்கு தோன்றியதில்லை.உன் நிழல் நான் என் நிழல் நீ என்று தான் நினைத்திருந்தேன்.

 

நிழல் கூட பிரியும்இருட்டு ஒன்று வருமென விளங்கவில்லை அன்று.இருளாய் ந்தது நம் கல்லூரி நாட்கள்.வீடு தாண்டி நாம் எடுத்து வைத்த முதல் அடி.நீ இருக்கும் பலத்திலேயே கல்லூரி சேரத் துணிந்தேன்.விடுதி சேர விரும்பினேன்.ஆழமான  அழகான நம் நட்பு வட்டாரத்துள் எத்தனைபேரை இணைத்திருந்தோம்.எத்தனை பேர் சுற்றியிருந்தாலும் உன் ஒருத்திக்கு தான் என் உண்மை உள்ளம் திறப்பேன்.இதை நீ அன்று அறியவில்லை.”நீ மாறிவிட்டாய் பாரதிஎன்று எத்தனையோ முறை சொல்லிவிட்டாய்.முள்ளாய் தைத்தது வள்ளி.

 

கல்லூரி விழாக்களிலோ தேர்வுகளிலோ உன்னை மிஞ்ச வேண்டும் என று எண்ணியதும் இல்லை.அப்படி ஆனதில் என் தவறும் இல்லை.அதில் நீ ஏன் இரணப்பட்டாய் வள்ளி.இதனாலேயே பல விஷயங்களில் தள்ளிபயணித்தேன்.உன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தேன்.பள்ளியில் உன் வெற்றியில் நான் அருகில் இருந்தேன்.கல்லூரியில் என் வெற்றியில் தனியானேன்.நான் மாறித்தான் போய்விட்டேனோ என்று புழுங்கினேன்.

 

துவண்டு விழும் போதெல்லாம் தோள் கொடுத்த தோழி நீ ஆனால் ஏனோ சிலசமயம் நான் துவண்டு விழவும் காரணமானாய்.பாடல்  பாடிய போதும் பதக்கம் சில வாங்கிய போதும் உன் கைதட்டலுக்கும் உன் அணைப்புக்குமாய் ஏங்கும் என் உள்ளம்.ஏனோ அது குறைநதும் போது.பின் காணாமலும் போனது.

உன் நண்பனுடன் என் முதல் காதல் பூத்தபோது உன்னைத்தேடி தான் சொல்ல வந்தேன்.விடுமுறையன்று நீ வீடும் செல்லவில்லை விடுதியிலும் காணவில்லை. தவிப்பின் உச்சத்தில் இருந்த மறுநாள் காலையில் சற்று கூடுதலாய் தான் பேசிவிட்டேன்..பிளவு பெரிதாகும் என்று புரியாமல்.தப்பேதும் செய்யமாட்டாய் ஆனால் உன் கூடா நட்பு ஒன்று தகித்ததடி அன்று.

 

சிட்டெரிக்கும் பார்வையோடும் சுடுபார்வை ஒன்றினோடும் பிரிந்துவிட்டாய்.பரிதவித்து போனேன்.அன்றும் பின்னரும் என் கண்ணீர் நனைத்த தலையனைக்கு மட்டுமே என் சோகம் தெரியும். இயல்பாய் பழக எத்தனை நாள் முயன்று விட்டேன்.பதிலேதும் பேசாமல் மௌனத்தில் எனை வதைத்தாய்.உனக்கென்று ஒரு உலகம் தனியாய் உருவாக்கி கொண்டாய்.

தனிமையின் கொடுமையில் ஆறுதலாய் நின்ற ரவி, உன் நண்பன் ,என் காதலன் எத்தனை தூது வந்திருந்தார்.என்னை வெறுக்க காரணம் என்ன என்ற குழப்பத்தில் குறுகினேன்.உன் காலில் மண்டியிட்டு மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.அன்னையாய் எத்தனை முறை தலைகோதி விட்டிருப்பாய்.என் மன்னிப்பு ஏற்று ஒரு முறுவல் தந்திருந்தால் என்றோ முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் நம் பிரிவிற்கு.என் அருகாமை தான் உன் ரணம் என்று உன்னை விலகியே பயணித்தேன்.ஆனாலும் உன்னை போல உற்ற தோழி இன்று வரை வாய்க்கவில்லை வள்ளி.கூண்டுகிளியானேன்.இறக்கை விரிக்க மறுத்துவிட்டேன.உன் வெற்றியின் ஒவ்வொரு நிமிடமும் என் மனம் மகிழ்ந்திருந்தேன்.இழந்த உன் புன்னகையை மீண்டும் கண்டேன்.துள்ளி ஓடும் நதியாய் என் வள்ளி உலா வர பரவசப்பட்டேன்.

வள்ளி!என் பிரிவில்  உனக்கொரு நன்மை என்றால் உன்னை பிரியவும் தயங்கமாட்டேன்.

வள்ளி நம் பார்வதி அத்தை நினைவிருக்கிறதா.நம்மை சீண்டிவிட்டு சிணுங்கலில் சிரிக்கும் சில்மிஷக்காரி.ஒருமுறை நாம் ஒன்றாய் கூட்டாஞ்சோறு விளையாட அந்த பக்கம் வந்த அத்த சோற ஆக்கி யாருக்கு ஊட்டப்போறீகஎன்றாள் கிண்டலாக.அறியாத பருவத்தில் நாம் சொன்னோம் எனக்கு அவ அவளுக்கு நானகலகலவென சிரித்த அத்தை அது சரி அப்போ ஒரே புருஷனயா கட்டப்போறீங்கவேற வேற வீடு போன என்ன செய்விகஎன்றாள்.அவள் பேசியதில் என்ன புரிந்ததோ நாம் பிரியக்கூடும் என்று மட்டும் புரிந்தது.அநத நினைப்பில் அழுது புலம்பினோம்.இரவோடு இரவாக எங்காவது போவோமா..இல்லை பாழும் கிணற்றில் பாய்ந்து விழுவோமா கல்யாணம் கட்டாமல் சந்நியாசி ஆவோமா எத்தனை திட்டங்கள் தீட்டினோம்.கடைசியாக ஒரு வீட்டில் மறுமகள் ஆகும் பட்சத்தில் தான் கல்யாணத்திற்கு சம்மதிப்போம் என்று தீர்மாணம் போட்டோம்.எத்தனை இனிமையான நாட்கள்.

 

இந்த நிகழ்வையும் இன்னம் எத்தனையோ ரவியிடம் பகிர்ந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் வள்ளியை தாண்டி யோசிக்க தெரியாதா என்று கிண்டலாய் கேட்பார்.ஆனால் உண்மையில் நீ இல்லாத ஒரு நிகழ்வும் என் வாழ்வில் இல்லை வள்ளி.பல இன்ப நிகழ்வுகள் சில கசப்பான நிகழ்வுகள்.உன்னை சநதிக்கும் அன்று ஒன்று மட்டும் கேட்க நினைத்தேன்.”வள்ளி நான் துரோகியா!இன்னமும் அப்படி நினைக்கிறாயா

 

தனிதனித்தடமாய் நாம் பயணித்த போதிலும் உன் அருகாமை  போதுமென எண்ணியிருந்தேன்.உன்னைவிட்டு இத்தனை தூரம் விலக முடிவெடுத்தது ன்று தான்.நம் கல்லாரியின் இறுதி நாள்.நம் பிரிவின் முதல் நாள்.இனிய நினைவுகள் மட்டும் சுமந்து மௌனமாய் பிரிய நினைத்தேன்.ஆனால் வேரோடு சாய்க்கும் காட்டாறு வெள்ளமாய் உன் ஒற்றை வார்த்தை என்னை தூக்கி எறிந்தது வள்ளி.

 

கூடவே இருந்து குழி பறித்து முதுகில் குத்திய துரோகி..இனி உன் நிழல் கூட சீண்டமாட்டேன்உன் குரலில் அந்த வார்த்தைகள் இப்போதும் என் காதில் எதிரொலித்தால் நெஞ்சு பிழிகிறது. உடம்பெல்லாம் தகிக்கிறது. உயிர் உறுத்துகிறது.என்ன செயதேன் என்று அன்று புரியவில்லை. ஆனால் என் வள்ளி என்னை இத்தனை வெறுக்க நடந்து கொண்டேன் என்று மட்டும் புரிந்தது.இனி உன்னை இம்சிக்கலாகாது என நிரந்தரமாய் பிரிய முடிவெடுத்தேன்.என் காதல் என்னை தடுத்திராவிட்டல் என்றோ முடிந்திருக்கும் என் கதை.பிரிந்த அன்று முதல் உன்னைப்பறறி கேள்வியிலேயே நிம்மதி அடைந்தேன்.பல வழிகளில் உன் தொடர்பு அறுக்காமல் இருக்க பாடுபட்டேன்.என்றேனும் உன்னை மீண்டும் பெறுவேன் என்ற நம்பிக்கையில்.நீ உன் குடும்பத்தோடு இடம் பெயர்ந்தது முதல் அதுவும் அறுந்து போனது.காதல்  கணவன் கை சேரும் நேரம் கூட உன் காலடி சத்தம் கேட்காதா என்று ஏங்கினேன்.

 

அழகான ரோஜா செடியாய் வளர்ந்த நம் நட்பில் நான் ஏன் முள்ளானேன் எனறு புரியாமல் குழம்பினேன்.நான் உனக்கு துரோகி ஆனதின் காரணம் அறிந்தபோது பதறிப்போனேன்.உன் வாழ்க்கையை நான் வாழ்வதாய் குறுகிப்போனேன்.பல சமயம் என் காதலையும் கசக்கி காயப்படுத்தினேன்.பல முறை இந்த காலம் பின் நோக்கி நகராதா?நம் கல்லூரி வாழ்க்கை திருப்பி எழுத, திருத்தி எழுத முடியாதா என்று ஏங்கினேன்.தவித்தேன்.

 

வெகுநாட்கள் கழித்து உன்னைப்பற்றி அறிந்த போது மகிழ்ச்சியின் உச்சம் தொட்டேன்.என் வள்ளி இன்று நாடே புகழும் ஒரு கல்வியாளர்,நடனப்பள்ளி தாளாளர்.உன் வளரச்சியில் என் மனம் கனிகிறது வள்ளி.ஆயிராமாயிரம் பேர் ன் னைப் பாராட்டும் போது உன் விடாமுயற்ச்சியை பேசும போது என் உச்சி குளிர்கிறது.நெஞ்சு நிறைகிறது.உன்னை ஆரத்தழுவி உச்சி முகர கூத்தாடுகிறது என் மனது.

 

நம் இருபது வருட நட்பை ரு மூனறு வருட நிகழ்வுகளால் உருமாற்ற முடியவில்லை வள்ளி.இன்றும் என்றும நான் ன் தோழி, உன் பாரதி தான்.நீ ன் வள்ளி தான்.நான் உன்னில் ஏற்படுத்திய காயங்களுக்கு மன்னிப்பு கேட்கிறேன் வள்ளி.என்னை மன்னித்து விடு

மன்னித்து விடு

மன்னித்து விடு

நீ மறுமுறை என்னை ஏற்பது உன் விருப்பம். ஆனால் மறுமுறை உனை கண்டால் ஒற்றை புன்னகையுடன் மாகச்செல்ல விரும்புகிறேன்.யாரோ மூன்றாமவர் போல சம்பிரதாய வார்த்தைகள் என்னை கொல்லுகிறது வள்ளி.உன் முகம் பார்த்து அந்த புன்னகை போதும்.உன் வளர்ச்சி பற்றிய விஷயஙகள் எனக்கு போதும்.என்றும் நீங்காத நம் நினைவுகள் அது மட்டும் போதும்.

 

இன்றும் என் அருகாமை ன்னை காயப்படுத்துமானால் உன்னை விட்டு விலகியே நிற்பேன்.ஆனாலும் உன்னைப் போல உற்ற தோழி இதுவரை வாய்க்கவில்லை வள்ளி.நீ வளர்ச்சிகள் மேன்மேலும் பெற என்றும் வாழ்த்தி நிற்பேன்.வாழ்த்துக்கள் வள்ளி.

 

 

                         _   உன் பாரதி

 

பி.கு.என் மகளின் பெயர் வள்ளி..

 

 

 

கண்மூடி நின்றிருந்தாள் பாரதி.அழகான தழுவலால் அவள் தவம் கலைத்தான் ரவி.அவன் நெஞ்சில் சாய்ந்து தான் எழுதிய கடிதத்தையே பார்த்து ஏக்கப்பெருமூச்சு வெளியேற்றினாள்.ஆதரவாய் தோள்குலுக்கி வழக்கம் போல் நம்பிக்கை புன்னகை பூத்தான் ரவி.

 

இந்த கடிதம் வள்ளி கையில் சேருமா?அவள் மனநிலை என்னவாக இருக்கும்?மறுமுறை இவர்கள் சந்திப்பில் விளங்கிவிடும்.அந்த சந்திப்புக்காக நாமும் காத்திருப்போம்.

 

 

கருத்துகள் இல்லை: