புதன், 1 ஜூலை, 2026

காதல் வலி

 

காதல் வலி

 

பட்டாடை உடுத்தி கொண்டேன்

பொன்நகைகள் பூட்டிக்கொண்டேன்

தோழிமார் சூழ மேடையும் ஏறிவிட்டேன்

 

நண்பனாய் நுழைந்து

காதலாய் கலந்து விட்ட கண்ணாளா

உம்மைத்தான் கண்களால் தேடுகின்றேன்

காதலால் கரைகின்றேன்

 

மணமகளாய் நான் மேடையேற

மணமகனாய் நீர் வேண்டுமென்று

புதுசட்டை பையில் காகிதம் கண்டீரோ

ஒருதலை காதல் என்று கிழித்து போட்டீரோ

 

தூதாய் நான் கொடுத்த புத்தாடை போட்டுவந்து

துரிதமாய் எனை கொண்டள்ளி போவீர் என்று

கனவு பல கண்டுவிட்டேன்

பகல் கனவு தான் கண்டுவிட்டேன்

 

இன்னொருவர் மாலை ஏற்கும் இந்நேரம்

இனியவரே நீர் மட்டும் இல்லாமல் போனீரே

சிற்பமாய் சிரித்திருந்த என்னை காதல் வலியால்

கல்லாய் செய்தீரே

 

 சொல்லாத காதல் எல்லாம் சுமையாய்த்தான்

போகுமென்று அறிந்து கொண்டேன்

இல்லாத காதலோடு இல்லறம் நடத்தத்தான்

கழுத்தில் தாலியும் ஏற்றுக்கொண்டேன்

 

மண்டப வாசலில் யாரது நீர் தானோ!

உம் கண்ணில் கண்ணீர் துளி தானோ!

என் விதியே!என் செய்வேன்

என் விதியே என் செய்வேன்

 

என்னை வாழ்த்தி நிற்கும் தெய்வங்காள்

வரம் ஒன்று வேண்டுகின்றேன்

அவருக்கும் காதல் எனில்

அந்த காதல் காகிதம் தான்

அவர் கையில் என்றும் கிடைக்காமல் போகட்டும்

அத்தை பெத்த மயிலே

 

என் அத்தை பெத்த மயிலே

இரட்டை ஜடை ஒயிலே

ஆத்தங்கரை ஓரமாத்தான் கால்கடுக்க காத்திருக்கேன்

கூட்டாஞ்சோறு ஆக்க தான் பல சாமன் சேர்த்திருக்கேன்

நித்தமும் தவறாம நீ வந்து காத்திருப்ப

அந்த வானத்து நிலவாத்தான் புன்னகையா பூத்திருப்ப

உன் கொலுசு சத்தம் இன்னும் கேட்கலையே

உன் கூந்தல் மல்லிவாசம் இன்னும் வீசலையே

என்னாச்சோ ஏதாச்சோ நெஞ்சு பதறுதடி

வஞ்சி உன் முகம் காண மனசும் துடிக்குதடி

 

அவசரமா வந்த என் ஆத்தா  சொல்லிவச்சா

உன் அத்தை பொண்ணு இனி விளையாட வரமாட்டா

ஒன்னும் புரியாம திருத்திருன்னு நான விழிக்க

குறும்பா எனை பார்த்து கலகலன்னு அவ  சிரிக்க

உன்னை காணாம அன்னந்தண்ணி இறங்கவில்ல

உன் விரலு தொடாம கண்ணும்தான் மூடவில்ல

 

மாமா என் வாசல்வந்து மரியாதை செஞ்சி வச்சான்

உன் அண்ணங்காரன் கூட  முறுக்காம பேசி போனான்

வாயெல்லாம் பல்லாத்தான் என் அப்பனும் சிரிச்சி நின்னான்

சடங்கு செய்ய போய்வான்னு அவங்ககூட அனுப்பிவச்சான்

 

உறவு எல்லாம் கேலி பேச

பொம்பளைங்க கொளவ போட

இது என்ன சடங்கோஎனக்கும் விளஙகவில்லை

உன்னை பார்வைஅதுமட்டும் எனக்கு போதும்புள்ள

 

நீ எங்கேன்னு என் கண்ணும் காத்திருக்க

ஓலைபின்னல்நானும்கட்ட உள்ளே நீயும் பூத்திருக்க

சந்தனம் மனம் வீச உன் மைக்கண்ணும் பார்த்திடிச்சி

சிரிப்பாக நீ சிவக்க என் மீசையும் அரும்பிடுச்சி

 

ரோசாப்பூ மூக்கழகி உன்ன நானும் பார்ப்பதெப்போ

வண்ணாத்திபூச்சியா நீயும் சிறகடிச்சி வாரதெப்போ

தாவணியில் உனைபார்க்க மனசும் ஏங்குது

அரை டவுசர் போடவும் எனக்கே ரொம்ப  கூசுது

 

அடி கோவப்பழ உதட்டுக்காரி என் நெஞ்சு கிறங்குது

இது என்ன புது நெனப்பு என் உசுர வாங்குது

சேர்ந்து விளையாட உன் கைப்பட்ட நேரமது

இப்போ வந்து என் கண்ணுல தேனா இனிக்குது

 

புரியாத வயசுல அறியாம தந்த முத்தம்

தூக்கம் கெடுத்து ஏக்கம் கொடுக்கும் நித்தம்

உன்னவிட்டா வேற ஏதும் நினைவில் நிக்கவில்ல

காலமெலாம் என்க்கூட விளையாட வாடிபுள்ள

 

இது ஒரு காதல் கதை

 

இது  ஒரு காதல் கதை

**********************

அவன் உள்ளம்:

 

இதோடு இருபதாவது முறை

உன் வீதியில் நான் வருவது

நிலவே நீ போனதெங்கே!

 

அடைத்திருக்கும் ஜன்னலும் பூட்டயிருக்கும்

வாசலும் உன் முகவரி சொல்லவில்லை

பூவே நீ போனதெங்கே!

 

வீதியோடு நான் போக

வாசல்கதவோரம் நின்று காதல் வீச்சு எறியும்

வஞ்சி நீ போனதெங்கே!

 

எப்போதும் திறந்திருக்கும் உன் ஜன்னல்

நான் கடக்க வெட்கப்புன்னகை பூக்கும்

காதல் கொடியே நீ போனதெங்கே!

 

திருவிழா கூட்டத்தில் தெரியாமல் நான் உரச

முகமெல்லாம் சிவந்த என்

ரோசாப்பூ நீ போனதெங்கே!

 

என் ஆசை சொல்ல தவித்த போது

கண்ஜாடையில் சம்மதம் சொன்ன

கண்மணியே நீ போனதெங்கே!

 

கரும்பு தோட்டத்திலே எனை

கட்டியணைத்து காதல் சொன்ன என்

கட்டிகரும்பே நீ போனதெங்கே!

 

பேச்சுக்கள் பல உரசல்கள் பல

தீண்டல்கள் பல முத்தங்கள் பல என எனை கிறங்கடித்த

காதலியே நீ போனதெங்கே!

 

என்னவள் என்ற எண்ணத்தில் எல்லை மீறிய போதும்

என்னை முழுமையாய் நேசித்த

என் உயிரே நீ போனதெங்கே!

 

வெளியூர் செல்ல விருப்பம் சொன்னபோது

வெள்ளை சிரிப்போடு வழியனுப்பிய என்

தேவதையே நீ போனதெங்கே!

 

வெளியூர் சென்று திரும்பும் வேளையில் அறிந்தேன்

வேறோடு பெயர்ந்துவிட்டாய் காரணம் நான் அன்றோ

என்னவளை நீ போனதெங்கே!

 

பாராமுகம் சற்றுநான் காட்ட யாருடனோ உனை இணைத்த

பழிசொல்லோடு நம் பிள்ளை சுமந்து சென்ற

தாயே நீ போனதெங்கே!

 

நீ போட்டகோலம் கலைய ஒன்றிரண்டு மழைதுளியும்

மீதம் என் கண்ணீர்துளியும் விழ

கண்ணே நீ போனதெங்கே!

 

உயிரே !உறவே !உண்மை காதலே!

உயர்ந்தவளே உடன்வர நீயில்லாமல்

நானும் தான் போவதெங்கே!

 

 

 

அவள் மனம்:

காத்திருந்த காலம் எல்லாம் கண்ணீராய்  கரைந்திருக்க

காதல் தந்த கண்ணாளா உன் கண்கள் காணாமல் நான் போகிறேன்

 

என் வீதி கடக்கும் போதெல்லாம் கண்ஜாடையில்  நீர் காதல்வீச

கதவோரம் நான் நின்று ஸ்வாசித்த நினைவுகள் எல்லாம்

மூச்சுகாற்றாக உள்ளிறக்கி நான் போகிறேன்

 

மூடாத ஜன்னல்வழி உனை பார்க்க காத்திருப்பேன்

நீர் வரும் அந்த நோடி வெட்கப்பூ பூத்திருப்பேன்

இமைமூடா அந்நோடிகள் விழியில் தேக்கி நான் போகிறேன்

 

நீர் சொல்லும் முன்பே உம்ம மனசு ஒடிவந்து சொன்னதய்யா

என் மனம் நான் திறக்க கரும்புதோட்டம் தான் சாட்சியய்யா

கட்டுக்கடங்காத ஆசையில் கட்டியணைத்த கனம்தான்

என் நெஞ்சுகுழியில் கட்டி நான் போகிறேன்

 

எத்தனையோ பேசினீர் எங்கெங்கோ தீண்டினீர்

எல்லையில்லா காதலேத்தான் என் உயிருக்குள் ஊற்றினீர்

ஊற்றெடுத்த நேசத்தை என் உயிரில் ஏற்றி

ஊமையாய் ஊரைவிட்டு நான் போகிறேன்

 

கண்டதும் காதலா கண்மூடி காமமா கண்டபடி ஊரார் ஏச

உம்ம குணம் நான் கூறமுடியாம உங்கப்பா எனை மிரட்டிய

வலியெல்லாம் வழித்தெடுத்து வாசல் கோலத்தில் வீசியெறிந்து நான் போகிறேன்

 

வயிற்றில் வளர்வது வியாதி அறுத்தெறி என்று அன்னை அலற

வியாதியல்ல கருவறை என் சாமி நீர் தந்த வரமென்று கதறி அழுது

துடித்து வென்று நம் கண்மணி பெற்றெடுக்க பெயர்ந்து நான் போகிறேன்

 

காலங்கள் மாறினாலும் கவலைகள் கூடினாலும் மாறாது நம் காதல் என்றே

கொக்கரிக்க ஒரு காளை கன்று கொண்டுவர

கனநேரம் கண்காணாமல் கரைந்து நான் போகிறேன்

 

தடுமாறும் தருணம் தான் உமக்கு தெரிந்தும் பிரிகிறேன்

பிள்ளை சுமந்து வந்து உம் சுமை போக்க  வருகிறேன்

தந்தை நான் தாயும் நீ என்ற தளராத உறுதியோடு

தலைநிமிர்ந்து இப்போது தடமில்லாமல் நான் போகிறேன்

 

முடிவு

குறுகுறு பார்வையோடும் குறுநகை ஒன்றினோடும்

அன்னை கரம்பிடித்து மெல்ல அவள் நடந்துவர

வெள்ளை வேட்டியோடும் வெளுத்த தாடியோடும்

வெளியே புறப்பட்ட அவன் கண்ணில் அவள் அன்னை விழ

இடிந்துவிழுந்த நெஞ்சங்களுக்குள் சாரல்மழை பூவாய் தூவ

கண்கள் நான்கும் குளமாக

அங்கு காதல் வென்றது

காற்றும் நின்றது

புரியாமல் நின்றிருந்த பிள்ளையை தூக்கி

உன் அப்பா என்று கை காட்ட

பொங்கும் மழலையில் தன் உறவை புதுபிக்க

புயலாய் வந்து பூவையை சேர்ந்தான்

பரிதவித்து அவர்களுக்காய் காத்திருந்த பாவியவன்.