புதன், 1 ஜூலை, 2026

கொலுசு

 

             ராஜசேகர் முகத்தில் ஒருவித வெறுமை குடிகொண்டிருந்தது. நிமிர்ந்த நடை போட்டு  மீசைமுறுக்கி பார்ப்பவர்கள் கைக்கூப்பும் கம்பீரம் கொண்டவர். இப்போது , எல்லாம் இழந்தவராக திருவிழாவில் காணாமல் போன சிறுபிள்ளையாக கலக்கம் பயம்,தனிமை,வெறுமை சூழ அழக்கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தார்.

             இப்போது தான் புரிந்தது, அவரின் கம்பீரம் அவருடையதல்ல. அவரை தாங்கிப் பிடித்து, தூக்கி நிறுத்திய அவரின் மனைவியினுடையது என்று. அவள் காற்றில் கலந்து தீயில் மறைந்த இந்நாள் அவர் வாழ்வில் பேரிடியான நாள். பேரன் பேத்தி என்று வாழ்வு கண்ட போதிலும் முதுமையில் துணையாக கைக்கோர்க்க வேண்டியவள் இப்படி திடீரென அவரை விட்டு சென்றது பெரும் துக்கம் தான.

        சுற்றம் சூழ்ந்திருந்த அந்த வீட்டில் எங்கு போனாலும் அவளின் வாசம். காதில் அவள் மென் குரல் தூரத்து இசையாய் விழுந்தது. தேடித் தேடி அலைந்தார். எங்கோ ஒரு இடத்தில் வந்துவிடமாட்டாளா என்று இருந்தது அவருக்கு. இழப்பை ஏற்றக்கவும் முடியவில்லை முழுங்கவும் முடியவில்லை. தவித்தார.

        வீட்டைச் சுற்றிச்சுற்றி வந்த அவர், ஏதோ நினைவு உந்த விருவிருவென  அவர்களது படுக்கையறை நுழைந்தார். அங்கு அவர் மனைவியின் புடவைகளை வெறித்துப் பார்த்தார். அதில் ஒன்றை எடுத்து நுரையீரலில் அவள் வாசம்  நிரப்பினார். ஆதங்கத்தை அடக்க முடியாதவராய் , "ஏன் டீ ஏன்..என்னடி அவசரம் வள்ளி வள்ளி என்னடி பண்ணுவேன்...வந்துரு டீ" என்று அழுது வெடித்தார்.

              அழுத்தி வைத்த இழப்பின் வலி மேலெழ பித்து பிடித்தவராய் அந்த அலமாரியில் இருந்த சாமான்களை வீசத்தொடங்கினார். பறந்து விழுந்த ஒவ்வொரு புடவையிலும் வள்ளி வந்து  நின்றுவிடக் கூடாதா என்று அலறினார்.

         'ஜல்'என்ற சத்தம் அவரை திசைமாற்றியது.

         அவரின் பார்வை  கீழே விழுந்திருந்த கொலுசில் விழுந்தது. கையில் எடுத்தார். கறுப்பு ஏறி, அங்கங்கே கண்ணி அறுந்து, சலங்கைகள் உரசலில் நசுங்கி இருந்தது. அந்த கொலுசு அவர் தன் வள்ளிக்கு தந்த முதலிரவு பரிசு. அன்று முதல் பல நாள்கள் அவர் காதில் அது ஒலித்துக் கொண்டு  இருந்தது நினைவில் வந்தது.

         அப்போதெல்லாம்  அவர்வள்ளிஎன்று அழைக்கும் போது அவளின் பதில் குரல் வரும் முன் சலசலத்து முந்திக்கொண்டு வரும் இந்த கொலுசின் சத்தம். எத்தனை அணிகலன்கள் வாங்கினாலும் மாற்றினாலும் என்றுமே அவள் அதை மாற்றியதில்லை. நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். கொலுசும் சிணுங்கி அணைந்து கொண்டது.

      கண்ணீரில் கரைந்தார். சமீபமாக எப்போது வள்ளியின் கொலுசொலி கேட்டது என்று நினைவுகளைத் துழாவினார். அது மட்டும் தெரியவே இல்லை.

 

 

இரம்யாநடராஜன்

    

  

கருத்துகள் இல்லை: