வியாழன், 18 ஜூன், 2026

பிறந்தநாள்

 

 

                                  பிறந்தநாள்

                 

                   எங்கள் வீட்டில் என்றும் இல்லாத பரபரப்பு. காலை நேரம் போர்வை இழுத்து மூடி உறங்கும் என் தம்பி கூடசுறுசுறுப்பாய் எழுந்திருந்தான். அப்பா காலையிலேயே ஸ்கூட்டி எடுத்து காய்கறி வாங்க சென்றுவிட்டார். அண்ணன் எப்போதும் காலையிலேயே எழுவான் ன்றாலும், இன்று ஏனோ அலுவலக வேலை இல்லாமல் தொலைகாட்சியில் மூழ்கி இருந்தான்.  அம்மா எங்கே. காலை நேரம் அம்மா முகம் பார்த்து ,அவள் பொன் இதழில் புன்னகை மலர்ந்தால் தான் என் நாள் விடியும். இன்று விடுமுறை என்பதால் சறற் தாமதமாக எழுந்தேன். இன்று என்ன வீட்டில் இத்தனை ஆரவாரம் என்றுஅம்மா தேடி சமையலறை புகுந்தேன்.

     அவள் மும்மரமாய் சமைத்துக்கொணட்டிருந்தாள். அவள் முதுகில் சாய்ந்து அனைத்தபடி காப்பி தரியா மா என்றேன். அதே மாறாத புன்னகையுடன்என் கன்னம் வருடி உட்காரு மா தரேன் என்றாள். சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அவளை பார்த்துக்கொண்ருந்தேன். புது பருத்தி புடவை, பூ முடித்த கொண்டை, உச்சியில் குங்குமம்,கண்களில் கருணை. ஜனனி ஜனனி என் அடி மனத்தில் பாடல் ஒலித்தது.

      அம்மா தான் எத்தனை எளிமை. காஞ்சி பட்டு இருந்தாலும் பருத்தியே அதிகம் விரும்புவாள். அளவான நகைகள் போட்டிருப்பாளஆனால் எப்போதும் புன்னகை அணிந்திருபபாள். மங்களகரமான முகம். எடுப்பான மூக்கு அதற்கு ஏற்ற மூக்குத்தி..காது ஒட்டிய காதுபூ. கைகளில் இரட்டை வளையல்..புடவை கட்டும் நேர்த்தி..உண்மையில் அவளால் தான் புடவைக்கு  அழகு. என் அப்பா பெண் பார்க்க சென்ற அன்று அம்மாவை பார்த்ததும் அத்தனை பேர் மத்தியிலும் சம்மதம் சொன்னாராம். அதை சொல்லி சொல்லி சிரிப்பாள் அத்தை. அம்மாவை பார்க்கும் போது அது அதிசயமாய் எனக்கு தோன்றவில்லை. வெளி அழகு மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் பேரழகி அம்மா. மூன்று தம்பிகள் ஒரு தங்கை என் அப்பா உடன் பிறந்தவர்கள்.  இன்று வரை அவர்கள் அண்ணி அண்ணி என்று சுற்றி வருவதும் அவர்கள் பிள்ளைகள் மீனாம்மா மீனாம்மா என்று அன்பு காட்டுவதும் அம்மாவின் குணம் சொல்லும்.

 

    இப்போதெல்லாம் ஏனோ அம்மாவிடம் ஒரு ப்ரத்யேக அன்பு பொங்குகிறது எனக்கு. அவளை பிரிந்து வேறொரு வீடு புகப்போகிறேன் என்பதாலோ என்னவோ. புகுந்தவீட்டில் என் அம்மா போலவே இருக்க வேண்டும் என்று மற்றும் அவ்வப்போது தோன்றும். எத்தனை விட்டுகொடுத்திருக்கிறாள் அம்மா.

 

அம்மா நீ டீச்சர்  டிரெய்னிங் பண்ணீங்க தெரியும். ஏன் மா வேலைக்கு போகலை

சிறிதாய் சிரித்தாள். அதனால என்னம்மா. நம்ம குடும்பத்துல அப்படி ஒரு பொருளாதார தேவை இல்லையே

பொருளாதாரம் இல்ல மா. உன்னோட சுயம் உன்னோட ஆசைக்கு போயிருக்கலாம் இல்ல

அது சரிமா. எனக்கு என் பிள்ளை வளர்ப்பு தான் முதன்மையா தெரிந்தது.”

உனக்கு அதனால வருத்தம் இல்லையா அம்மா. நீ ஒரு நாளும் அப்படி சொல்லி நான் கேட்டதில்லை

கண்ணா வருத்த பட என்ன இருக்கு. ஒரு முடிவை எடுத்த பிறகு  அதில் வரும் கஷ்டநஷ்டங்களை ஏத்துக்கனும். உங்க அப்பா  என் முடிவுக்கு மறுப்பு சொன்னதில்லை. இது என் சுய முடிவு. அதை முழு மனதா ஏத்துகிட்டேன். இழந்தது நினைத்து கிடைத்ததை கடத்தக்கூடாது. காலம் நம்மை எப்படி செலுத்தினாலும் நாம் மட்டும் மாறக்கூடாது.”

அப்பபப்பா எவ்வளவு பெரிய விஷயம்.

அம்மா இப்போ உங்களுக்கு இருக்கிற தோழிகள் பற்றி தெரியும் ஆனா உங்க பள்ளி தோழிகள் யாருமே தொடர்புல இல்லையா மா

இருக்காங்க கண்ணா. உன் கல்யாணத்திற்கு வருவாங்க பாரு.”

நான் சந்திச்சதே இல்லையே மா

வெளியூர்ல இருக்காங்க டா. அப்பப்போ போன்ல பேசுவோம்

ஏன் மா ஒரு முறை நீஅவங்களை வரச்சொல்லி இருக்கலாம். இல்ல நீ அவங்களை பார்கக போகலாம்எதுவுமே பண்ணலை

சந்தர்ப்பம் வாய்க்கலை மா. அதுமட்டுமல்ல அவங்களுக்கும் பொறுப்புகள் இருக்கும்.”

என்னம்மா நீங்க இபப்டி சொல்றீங்க. உங்களுக்கும் சில நேரம் ஒதுக்கனும் மா. எப்பவும் வீடு புருஷன் பிள்ளைன்னு இருந்துட்டீங்க. இனியாவது மாறுங்க மா

இம்முறை பலமாய் சிரித்தாள். செல்லமாக கன்னம் தட்டினாள்.

எனக்குன்னு நேரம் ஒதுக்கலைன்னு யார் சொன்னா. என் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் என் கடமைகள் தாண்டி என் விருப்பமான முறையில் என் மனம் திருப்தியா செலவிடறேன். வீட்டை மறந்து கடமை தவிர்த்து வெளி மனிதர்கள் கூட சுற்றுலா போகிறது இல்லைமா சுயம். சுயம் என்பது சுடர் . எங்க இருந்தாலும் என்ன பண்ணாலும் எந்த சந்தர்ப்பதிலும் ப்ராகசிக்கனும். நம் வாழ்க்கையை நாம வாழனும். மனத்திருப்த்தியோட வாழனும். என்னோட வாழ்க்கை தத்துவம் ரொம்ப ஸிம்பிள் மா. காலை கண் விழிக்கும் போது புத்துணர்வா எழனும் இரவு படுக்கும் போது நிறைவா படுக்கனும் அவ்வளவு தான்.”

     நெஞ்சில் ஆணி அடித்து உட்கார்ந்தது அவள் வாழ்க்கை தத்துவம். உண்மையில் அவள் அப்படி தான் வாழ்கிறாள். அவள் செய்யும் சிறுசிறு வேலைகளிலும் அவள் பளிச்சிடுவாள்.. ஒரு வேளை ஒரு நாள் சோம்பி உட்கார்ந்தது இல்லை. ஒரு அழகான நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறாள். எத்தனை உள்ளது அவளிடம் கற்க. பலவித நினைவலைகள் சூழ சுடசுட ாப்பி கொண்டு கொடுத்தாள். அவள் கைபற்றி அம்மா நன்றிஎன்றேன்.

      சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு போனாள். இப்படி ஒரு அம்மா வயிற்றில் பிறந்தது எண்ணி பெருமைபட்டுக்கொண்டு என் தினசரி கடமைகள் முடித்து வந்தேன். சமையல் வாசம் ஆளைத்தூக்கியது. அம்மா சமையல் பற்றி கேட்க வேண்டியதே இல்லை. நாக்கில் சுவை அரும்புகள் விழிக்க அனைவரும் ஒன்றாய் சேர்ந்து உண்டோம். அதற்குள் அத்தை சித்தப்பா எல்லாரும் வந்து கூடினர். இது என்ன இன்று இவ்வளவு கொண்டாட்டம் என்று சற்று ப்ரமித்தேன். என் அத்தை மகள் அம்மாவின் கைகுலுக்கி கன்னத்தில் முத்தமிட்டு ,’மீனாம்மா ஹாப்பி பர்த்த்டே என்றாள். என்னுள் ஒரு மின்னல். அட ஆமாம் இன்று அம்மா பிறந்தநாள். ஐம்பது வயது முடிந்திருந்தது அம்மாவிற்கு. எப்படி மறந்தேன் தெரியவேயில்லை.

    அத்தனை பேர் முன்னிலையில் நான் மறந்ததை காண்பித்துக்கொள்ள வெட்கி அம்மாவிடம் தனியாக பேசி வாழ்த்து கூறி மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அது அன்று அவ்வளவு சுலபமாய் நடப்பதாய் இல்லை. எப்போதும் அவளை சுற்றி ஒரு கூட்டம். அவளும் வந்தவர்களை கவனிப்பதில் மும்மறமாய் இருந்தாள். அண்ணி உங்க பிறந்தநாள் ஸ்பெஷல் லா ஹல்வா செய்து தாங்கமீனாம்மா உங்க கையால பாயசம்….அண்ணி அந்த ரோஸ்ட் உங்க ஸ்பெஷல் ப்ளீஸ்….ஆளுக்கொரு மெனு….பம்பரமாய் சுழன்றாள். அவர்களும் தங்களால் ஆன உதவிகள் செய்தார்கள என்றாலும் அம்மா பிறந்தநாள் அன்று தான் நிறைய வேலை குவிந்தது அவளுக்கு. அந்த அலுப்பு அவளுக்கு சற்றும் இல்லை. அது எப்படியோ தெரியவில்லை.

      அன்றைய பொழுது வெகு உற்சாகமாக இருந்தது. மாலை நேரம் அவரவர் விடை பெற அப்பாடி எப்படியோ அம்மா தனியாவாள். பேசிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்க. அப்பா எங்கள் அனைவரையும் கோவிலுக்கு கிளம்பச் சொன்னார். மகிழ்வுந்தில் அம்மா பக்கத்தில் என் தம்பிஅமர்ந்துவிட பேச முடியாமல் போயிற்று. கோவில் முடித்து வீடு திரும்பும் போது இரவு உணவு தயாரிப்பிலிருந்து அவளை விடுவிக்க ண்ணி..வெளியில் சாப்பிடலாமா என்றேன். அதற்கு என் தம்பி வேண்டாம்மா. நீங்க ஏதாவது செய்து கொடுங்க என்று என் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்தான். ஒரு வழியாக வேலைகள முடிந்தது.அம்மா எப்போதும் பால்கனியில் அமர்ந்து இரவு வானம் இரசிப்பாள். அதுதான் பெரும்பாலும் நான் அம்மாவிடம் தனியாக பேசும் நேரம். அவள் அருகில் அமர்ந்து அவள் மடியில் தலைசாய்த்தேன்.அம்மா என்னை மன்னிச்சிடுங்க. நான் மறந்துட்டேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா

நன்றி கண்ணா. ஆனா ஏன் மன்னிப்பு

என்னம்மா உங்க பிறந்தநாள் மறந்துட்டேனே. எனக்கே என் மேல வருத்தம் மா

எதுக்குடா.  இன்றைக்கு  நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா. வாயால் வாழ்த்தினாத்தான் இல்ல. இன்றைக்கு முழு நாளும் எல்லாரும் எனக்காக என் கூட செலவழிச்சது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா. அது தான் என்னை சந்தோஷப்பட வைத்தது.”

அம்மா நீங்க எனக்கு வியப்பு தரீங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எல்லா விஷயத்திலயும் பாஸிடிவ் தான் பார்க்கறீங்க. எப்படி மா முடியுது உங்களால

அப்படி இல்ல மா. எனக்கு கல்யாணம் ஆன முதல்ல உங்க அப்பா வாழ்த்து சொல்லலைன்னு வருத்தப்பட்டிருக்கேன். ஆனா ரு உண்மை தெரிஞ்ச பிறகு எல்லாம் மாறிப்போச்சு. அன்பு ,நேசம் ,காதல், பாசம் இதெல்லாம் தான் பெரிய விஷயம். அது நிறைவா கிடைக்கும் போது இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள் எதிர்பார்ப்புகளுக்காக நம் நிம்மதி ..சந்தோஷம்.. உறவுகளை குலைச்சிக்க கூடாது.இப்போ நீ வாழ்த்து சொல்லலைன்னா உனக்கு என் மேல அன்பு இல்லைன்னு அர்த்தமா. அது சுத்த அபத்தம். நீ வீணா யோசிககாத. இன்னொன்னு எதையும் பாஸிடிவ்வா பார்க்கறேன்னு சொல்ற. அப்படி தான இருக்கு. நீயே பாரு. எனக்கு என்ன குறை. நல்ல கணவன், நல்ல க்கள்,வீடு,உறவுகள் ,தோழிகள் எல்லாம் கிடைச்சிருக்கு. எத்தனையோ பேருக்கு இதெல்லாம் இல்ல. ஆனாலும் அவங்க சந்தோஷமாத்தான் இருக்காங் ஏன் அவங்க இல்லாததை பார்க்கலை இருப்பதில் நிம்மதி அடையறாங்க. அப்போ நான் எவ்வளவு நிம்மதியா இருக்கனும்.

    வாழ்க்கை நிரந்தம் இல்லை. நாளை விடியல் நம் வசம் இல்லை. பல ஏற்றதாழ்வுகள் வரும். இழப்புகள் வரும். உறவுகள் பிரியும். மனிதர்கள் மாறிப்போவாங்க. சூழ்நிலைகள் மாறும். இதில் எதுவும் நம் கையில் கிடையாது. நாம் எப்பவும் மாறக்கூடாது அது தான் நம் கையில் இருக்கு. எல்லா உயிரின் தேடலும் சந்தோஷம்.. நிம்மதிதான். அது கொட்டி தான் கிடக்கு. பார்க்க தெரியனும் அனுபவிக்க தெரியனும் அவ்வளவே.”

 

    அம்மா பேசப் பேச நானும் அவளைப்போல் இருக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டேன். உலகமே நிறைவாய் தெரிந்தது. வாழ்வே நிறைவாய் தெரிந்தது. புதிதாய் பிறந்ததாய் உணர்ந்தேன். அவள் கையில் முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்  அம்மாஎன்றேன். அவளால் மறுமுறை பிறந்த என்னை இரு கைகளில் அனைத்து உச்சி முகர்ந்தாள்.

 

இரம்யாநடராஜன்

கருத்துகள் இல்லை: