வெள்ளி, 5 ஜூன், 2026

சொக்கன்

                       சொக்கன்

 

  சூரியன் உச்சி தொடும் நேரம். எங்கும் ஈரமரத்தின் வாசம். மண் வாசம். கழிக்கப்பட்ட மரங்களை சுமக்க அங்கு லாரிகள் இரைச்சல். என்ன சொல்ல. எத்தனை மாநாடு போட்டாலும் எத்தனை தொண்டை தண்ணீர் வற்றினாலும் மரம் அழிப்பதை இவர்கள் நிறுத்துவதாய் இல்லை. செய்வினையும் வைத்து கொண்டு வினைப்பயனையும் அனுபவித்து மடியும் அற்ப பதர்கள். என் உள்ள குமுறல் யாரிடம் சொல்ல. கூட்டமாய் ஒரே குடும்பமாய் சிரித்து மகிழ்ந்து தழைத்து காய்த்து கனிந்து வளர்ந்து வந்தோம். இப்படி என் உற்றாறை சூறையாடி அறுத்து இந்த லாரியில் மரண ஊர்வலம் நடத்த வந்து விட்டார்கள். கோடாலியினும் கொடிய இராட்சத இயந்திரம் கொண்டு எங்களை அறுக்கும் நேரம்அஅப்ப்பா அந்த ஓலம் என்னை உலுக்குகிறது. நூற்றாண்டு கூட தொட முடியாத இவர்கள் முண்ணூறு ஆண்டு வரை கூட பயன் தரும் எங்களை ஆள்வதா. இது என்ன ஆணவத்தின் உச்சம்.

 

      அய்யோ அதோ வருகிறது அந்த இயந்திரம். என் உடலையும் கூறு போட வருகிறது. என்ன செய்வேன். என்னை அழிக்காதே மனிதா..உன் சமூகமும் அழியக்கூடும். ஆஆஆ என் ஒரு கிளையை கிள்ளி எறிந்துவிட்டான். என் அம்மூ நீ எங்கேநீயிருந்தால் இது நடக்குமா?அவளை ஒருமுறை பார்க்கும் வரை யேனும் என்னை விட்டு வையுங்களேன்.

 

    “நிறுத்து..இந்த மரம் மட்டும் இருக்கட்டும். நல்ல சென்டர்ல இருக்கு லெண்ட்ஸ்கேபிங் பாயிண்டா இருக்கும்நெட்டை ஆசாமி சொல்ல,“சரிங்க….வாங்கப்பா இதை வெட்டாதீங்க”, மற்ற ஆசாமிகள் வழிமொழிய நான் பிழைத்தேன். இன்று வரை பிழைத்திருக்கிறேன்.

நான் ஒரு மாமரம். நாற்பது வருடமாக இந்த இடத்தில் இருக்கேன். என்னை நட்டு வளர்த்தது என் அம்மூ. விளையாட்டாக மயானத்திலிருந்து பிடுங்கி வந்து நட்டு வைத்ததாக அவள் அம்மா சொல்லுவாள். என்னுடனே வளர்ந்த என் அம்மூ எனக்கு தினமும் தண்ணீர் ஊற்றி ஒரு தளிர் வந்தாலும் சந்தோஷ கூத்தாடி மகிழ்வாள். அந்த தோப்பு அவள் இராஜ்ஜியம் இருந்தாலும் நான் மட்டுமே அவள் சொந்தம். என்னை சொக்கம் என்று கூப்பிடுவாள். அழுகையோ ஆனந்தமோ என்னை கட்டிக்கொண்டு புலம்புவாள். அவளை தொலைத்தே இருபது வருஷம் ஆச்சு.

     அவளை கடைசியாக பார்த்தது கூட ஞாபகம் இருக்கு. இங்க இருந்த தோப்பு மரங்கள் எல்லாம் தடவி தழுவி அழுது..என்னை கட்டிக்கொண்டு சொக்கா சொக்கா என்று தேம்பி கொண்டே தான் போனாள். திரும்ப வருவாள் என்று தான் காத்திருக்கிறேன். அவள் போன சில வருடங்களில் தான் அந்த தோப்பு அழிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்தது. என்னை தவிர எல்லா மரத்தையும் வெட்டி சாய்ச்சு அங்கு பல விதமான இயந்திரங்கள் இறக்கி பெரிய பெரிய கட்டிடங்கள் எழுப்பிட்டாங்க. இருந்த தோப்பு அழிச்சிட்டு கட்டிடத்த சுத்தி வரப்பு கட்டி மண் கொட்டி சின்ன சின்ன செடிகளா நட்டு வச்சு  அதுக்கு தண்ணீர்  ஊற்ற பாதுகாக்கன்னு ஆட்கள். என்ன விந்தை.

நாட்கள் நகர்ந்தது. மக்கள் கூட்டமாக குடியேறத்தொடங்கினர். நான் அவளை தேடி நிற்கிறேன். என் மீது கல் எறிந்து காய் வென்ற சிறுவர்கள்..தவறாமல் என் கிளையில் கூடுகட்டி குஞ்சு பொறிக்கும் காக்கை….என் இலை பறித்து விளையாடும் இளம் கைகள்..கூடு கட்ட எத்தனித்து கூண்டோடு அழிந்த தேனீக்கூட்டம்..என்னை சுற்றி அமர்ந்து கொண்டு நடந்த வம்புகள் வழக்குகள்,காதல் தருணங்கள் இன்னம் எவ்வளவோ. இதை எல்லாம் என் அம்மூவிடம் சொல்ல காத்திருக்கிறேன்.

      இப்படி காத்திருந்த ஒரு காலை வேளை ….எப்போது பார்ப்பேன் என்று ஏங்கிய கனம்..அவள் வந்தாள். மெல்லிய தேகம்,கதர் சீலை,சற்று நரைத்த முடி உடலும் உள்ளமும் சோர்ந்த ஒரு உருவம். என் அம்மூ வா இது. அம்மூ அம்மூ நீதானா. என்னை பார்க்க வந்தியா? குறுகுறுக்கும் உன் பார்வை எங்கே? கொலுசு கொஞ்ச நீ நடக்கும் நடை எங்கே? தாவணி தாண்டி தெரியும் உன் வனப்பு எங்கே? இதழை பிரியாத புன்னகை எங்கே? எழில் தேவதை நீ போனதெங்கே?.

 

   “அம்மூ நீயா என்னடி அதிசயம் இந்த ஊர்பக்கம்….இருபது வருஷம் இருக்குமா நீ இங்க வந்து? போன மாசம் நான் உன் ஊருக்கு வந்தேன் வருவதா சொல்லலியே?” இது பொன்னி அக்கா.

 

   “ஆமாக்கா இருவது வருஷம் இருக்கும். திடீரென தான் வந்தேன் கா. இந்த இடமே மாறிப்போச்சே கா….இப்படி கட்டிடமா இருக்கே…”.

ஆமா ஆமா ஊரு முழுக்க இது தான். எப்படி இருந்த இடம். இந்த தோப்புக்குள்ள எப்படி விளையாடுவோம். அந்த ஏரி தண்ணி அள்ளி குடிப்போம். இப்ப பாரு ஏரி முழுக்க சாக்கடைகலி காலம் தான் போ”.

அக்கா இது சொக்கன் தான”.

ஆமா அம்மூ எப்படி நினைவு வச்சிருக்கஎப்படியோ இது மட்டும் தப்பிச்சு வளர்ந்து நிக்குது”.

எப்படி கா மறப்பேன்..நான் பார்த்து பார்த்து வளர்த்தவன்என்னை தொட்டாள். சிலிர்த்தேன். கண் பூத்தாள். கலங்கினேன்.  இதமாக கிளை அசைத்து சமாதானம் செய்தேன்.

 

ஏய் என்னடி சின்னபுள்ள மாதிரி அழற. அப்போ தோப்பு விற்கும்போது தெரியலையா?” என்ன என் உயிர் என்னை விற்றதா. காற்றும் நின்றது. மனிதர்கள் எல்லாம் ஒரே விதமா?நீயுமா அம்மூ.

நான் என்ன பண்ண அக்கா. ஐயா கடன் தீர்க்க வித்தாரு. அப்ப நான் சின்ன பொண்ணு என்ன செய்யமுடியும்”.

நல்லா வித்தாரு. வித்து என்ன பண்ணாரு உங்கய்யா? ஆறு பொண்ணையும் பெத்து ஏழாவதா ஒரு ஏழறைய பெத்துஎன்னவோ உங்களை பாழும் கிணத்திலேயே தள்ளி இருக்கலாம். இப்படி சந்தியில நிற்க வச்சிருக்க் வேண்டாம்

எல்லாம் விதி கா. யாரை குறை சொல்ல. மவன் தான் உசத்தின்னு தலையில் வச்சி ஆடினாரு அவன் சுருட்டிகிட்டு ஓடிட்டான். சொந்தம பந்தம்னு என்னை குடிகாரனுக்கு கட்டி கொடுத்தாரு. வந்தது தான் இப்படின்னா எனக்கு பொறந்ததும் அப்படி.  அப்பன் கிட்ட என்ன கத்துகிட்டானுங்களோ ஆத்தாள அடிச்சு காசு புடுங்க கத்துகிட்டானுங்கமுந்தானையில் கண்ணீர் துடைத்தது என் தங்கம்.

என்ன பேசி என்ன விடு அம்மூ ..உன் பருஷன் போனதோட உன் தலையெழுத்து மாறும்னு தான் நாங்களும் நினைச்சோம்….ம்ம்ம. புள்ளைங்கள அங்கயே விட்டுபுட்டு வந்தியா..”

இல்லக்கா இங்க தான் கூட்டி வந்திருக்கேன்..வேலையில் சேர்த்திருக்கேன்..நான் பிறந்த ஊராவது என் தலையெழுத்து மாத்தாதான்னு பார்க்கலாம்.”

கவலை படாதே அம்மூ இந்த இடமெல்லாம் நீ ராணியா இருந்த அந்த ராசி உன்னை மறுபடி வாழ வைக்கும். சரி நீ இங்க எங்க?”

ஒரு உதவி அக்காஇங்க ஏதாவது வீட்டில் வேலைக்கு சேர்த்து விடேன்திடுக்கிட்டேன். இந்த இடத்தின் சொந்தக்காரி இன்று வேலைக்காரி ஆகப்போகிறாள். நெஞ்சு ஏனோ அடைத்தது.

அதுக்கென்ன வா

பொன்னி அக்கா பின்னாலேயே அம்மூ போனாள். சற்று தூரம் போய் திரும்பி என்னை பார்த்து கண் சிமிட்டி புன்னகை பூத்தாள். என் இலை எல்லாம் சிலிர்த்தது. வேறெல்லாம் விரைத்தது. கிளைகள் அசைத்து என் மகிழ்ச்சி சொன்னேன். இளம் தளிர் துளிர்த்தேன்.

      அன்று முதல் என்னில் வசந்தம் தான். மழையில்லாமலேயே சிலிர்த்தேன் அவள் தொட்டுவிட்டால். காலம் இல்லாமல் பூ பூக்கிறேன் அவள் அணைத்து கொண்டால். எனக்கு தண்ணீரும் காற்றும் சூரிய ஒளியும் ஆனாள் என் அம்மூ. வீட்டு வேலை முடிந்தாலும் வெகு நேரம் என் மடியில் கிடந்தாள். என்னிடம் கண்களால் பேசினாள். ஏனோ கண்ணீர் வடித்தாள். சொக்கா சொக்கா என்று என்னை அனைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தாள். பெருமூச்சாய்  சுவாசித்தாள். சில சமயங்களில் என் கிளையின் அழகையும் அதில் இருக்கும் காக்கை கூடு பற்றியும் என் இளம்தளிர்களின் நிறமாற்றம் பற்றியும் பூக்கள் பற்றியும் பேசி கொண்டிருப்பாள். பார்ப்பவர்கள் அவளை வேறு விதமாக தான் பார்த்தார்கள். என்னுடனேயே பலமணிநேரம் கழிக்கிறாள். இழந்த என் அம்மூவை திரும்பப் பெற்றுவிட்ட ஆனந்தம் எனக்கு.

ஒரு நாள்என்ன அம்மூ உன் சொக்கன விட மாட்டியா வா வீட்டுக்கு போகலாம்”.

என்ன பொன்னியக்கா எனக்கிருக்கும் ஒரே ஆறுதல் இந்த சொக்கன் தான்மெதுவாக தட்டினாள் ஆனால் ஏனோ என்னுள் பரபரப்பு.

அது சரி மனுஷங்களுக்கு மரம் பரவாயில்லை,சரி வா ரொம்ப சோர்வா இருக்க

பொன்னிக்கா சொல்வது…..நான் மரமா ஆமாம் மரம் தான் ஆனால் என்னுள் ஏனிந்த இத்தனை உணர்ச்சி குவியல். அம்மூவை கண்டது முதல் பரபரப்பு அவளை காண ஒரு துடிப்பு அவள் என் மீது சாய எனக்குள் ஒரு சிலிர்ப்பு. அவளுடன் ஒவ்வொரு நோடியும் தித்திப்பு.  அவளை காணாமல் வாடிடும் இலைகள் அவள் வாசத்திலேயே புத்துயிர் பெறும் இதெல்லாம் எப்படி. பொன்னி அக்கா பின்னால் சென்ற என் அம்மூ என்னை திரும்பி பார்த்தாள். கண்ணில் நீர் கோர்க்க முகத்தில் ஒரு நிறைவோடு மின்னலாய் ஒரு புன்னகை பூத்துவிட்டு போனாள். அந்த காட்சி என்னுள் உறைந்துவிட்டது.

 

     அன்று போனவள் தான் இன்றுவரை காணவில்லை எங்கு போனாளோ தெரியவில்லை. மறுமுறை அவளை காண வேண்டும் அது ஒரு நோடி ஆனாலும்.

அதோ பொன்னி அக்கா. என்னை பார்த்து இப்படி பிழியப்பிழிய அழுகிறாளே. என்ன இது. அம்மூ எங்கே. அங்கு என்ன ஊர்வலம். காலன் யாரை விட்டுவைப்பான். இது என்ன அந்த ஊர்வலத்தின் நாயகி என் அம்மூ வா?அய்யோ என்ன இது . உன்னை பார்க்கும் ஒரு கனம் இப்படியா அமைய வேண்டும் அம்மூ. இப்படி உன் மரண ஊர்வலம் பார்க்கும் மரமாய் ஆனேனே என் விதியை என்ன சொல்வேன். என் இலைகள் உதிராதா என் கிளைகள் முறியாதா இப்படியே என் உடல் இரண்டாய் பிளக்காதா. அய்யோ உன் சொக்கன் புலம்புகிறேன் தவிக்கிறேன் உன் காதில் விழவில்லையே அம்மூ.

   அம்மூ அன்று நீ என்னை பார்த்து புன்னகைத்ததின் அர்த்தம் இது தானா. அய்யோ போகிறாளேஎன்னைத்தாண்டி எல்லைத் தாண்டி. இனி உன் வாசம் எங்கு வரும் இனி உன் தொடுதல் எங்கு கிடைக்கும். உன் அன்பு எப்படி கிடைக்கும். காற்று சற்று வேளை நிறுத்தம் செய்தது. மேகம் சூழ்ந்து கதறும் சொக்கனுடன்  மழை அலறியது.

    இன்றும்  அதே இடத்தில் அதே நிலையில், காக்கை கூடு, சுற்றி திரியும் சிறுவர்கள் , வம்புகள் வழக்குகள் , காதல் தருணங்கள் இடையில் அம்மூவின்  அன்புச் சின்னமாய்  ஒற்றையில் சொக்கன்.

 

 

 

 

கருத்துகள் இல்லை: