ஞாயிறு, 7 ஜூன், 2026

அறமெனப்படுவது யாதெனின்

 

அறமெனப்படுவது யாதனின்

“கயல்... என்ன பண்ற நீ? நல்லாத்தானே இருந்த. நீ ஏதோ மனிதாபிமானத்தோட வாங்கிக் குடுத்தா... இப்ப அந்தப் பாட்டி பாரு, சாப்பாட்டுக்கு காசு குடுக்குது. உனக்கு தேவையா? ஏதோ பெருசா சேவை பண்ணறவ மாதிரி. பாத்திரம் அறிஞ்சுதான் தர்மம் பண்ணணும். தேவையில்லாம கூடை வேற... என்னவோ ஆச்சு உனக்கு!”

படபடவெனப் பொறியும் தன் தோழிக்குப் புன்னகை வீசிவிட்டு, “இது அறம்... மனிதம்... உனக்குப் புரிஞ்சது அவ்ளோதான்!” என்று ஹெல்மெட் மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியைக் கிளப்பினாள் கயல்.

  •  

மேகம் சூழ்ந்த இளமாலை. சிறு தூறலுக்கு ஆங்காங்கே கடைகளில் ஒரு கூட்டம் ஒதுங்கி நின்றுக்கொண்டிருக்க, கயல் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு எதிர்திசைக் கடை நோக்கி ஓடினாள்.

“ஏய் கயல்... லூசு... ஆரம்பிச்சுடுச்சு!” என்று முணுமுணுத்துக்கொண்டே அவள் தோழியும் பின் தொடர்ந்தாள்.

பாதி நனைந்த கைகளை உதறியபடியே,

“அண்ணா... ரெண்டு டீ... ஏய் வா... சூடா டீ குடிச்சிட்டு போலாம்... இங்க உக்காரு வா...”

தன் தோழியைப் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு, அங்கு பக்கத்தில் வயர் கூடை பின்னிக்கொண்டிருந்த பாட்டியைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

கோப்பை வழிய டீ வந்ததும் அதை வாங்கிக்கொண்டு,

“பாட்டி, என்ன கூடை பின்னறீங்க? சின்னதா? பெருசா? எவ்ளோ?” என்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.

“கயல், நீ என்ன வாங்கப்போறியா? எதுக்கு டீ? உன்னோட அலப்பறை தாங்கல. இந்தத் தூறல் வேற நசநசன்னுட்டு...”

எலியை மடியில் கட்டிக்கிட்டா பிராண்டத்தான் செய்யும் என்பது போல வெற்றுப் புன்னகையை வீசிவிட்டு, பாட்டியிடம் கதை கேட்க ஆரம்பித்தாள் கயல்.

மழை வலுக்க ஆரம்பித்தது.

இரண்டு டீ மூன்றானது. கூடவே இரண்டு ப்ளேட் இடியாப்பம் மூன்று ப்ளேட் ஆனது.

“சாப்பிட்டுக்கிட்டே சொல்லு பாட்டி... உன் கதை ரொம்ப சுவாரஸ்யம்தான். அப்பறம் தாத்தா என்ன பண்ணாரு? பயங்கர ரொமான்டிக் ஹீரோ போல!”

வெட்கமும் சிரிப்பும், சிறுதுளி ஈரமும், சோகமும், கலகலப்புமாக மழை அரங்கேறிக்கொண்டிருந்தது.

ஒரு வழியாக மழையும் விட்டது.

“சரி பாட்டி... எனக்கு இரண்டு கூடை குடு. அந்த சிவப்பும் இந்தப் பச்சையும்... பாத்து விலை சொல்லிக் குடு...”

என்று தன் தோழியின் ‘நச்’சையும்மீறி இரண்டு கூடைகளை வாங்கிக்கொண்டாள்.

“என்ன பாட்டி, சில்லறை நிறைய குடுக்கற? ஓ... சாப்பாட்டுக்கா? சரி சரி, போயிட்டு வரட்டா. வேற யாருக்காவது வேணும்னாலும் உன்னைச் சொல்லிவிடறேன். சரியா? டாட்டா!”

என்று எழுந்தவள் கையில் ஒரு சிறு பின்னல் மீனைத் திணித்தாள் பாட்டி.

“தேங்க்ஸ் பாட்டி!” என்று கீழிறங்கினாள் கயல். கண்களில் மீன் துள்ளியது.

“கயல்... என்ன பண்ற நீ? நல்லாத்தானே இருந்த. நீ ஏதோ மனிதாபிமானத்தோட வாங்கிக் குடுத்தா... இப்ப அந்தப் பாட்டி பாரு, சாப்பாட்டுக்கு காசு குடுக்குது. உனக்கு தேவையா? ஏதோ பெருசா சேவை பண்ணறவ மாதிரி. பாத்திரம் அறிஞ்சுதான் தர்மம் பண்ணணும். தேவையில்லாம கூடை வேற... என்னவோ ஆச்சு உனக்கு!”

படபடவெனப் பொறியும் தன் தோழிக்குப் புன்னகை வீசிவிட்டு,

“இது அறம்... மனிதம்... உனக்குப் புரிஞ்சது அவ்ளோதான்!”

என்று ஹெல்மெட் மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியைக் கிளப்பினாள் கயல்.

– இரம்யாநடராஜன்

 

கருத்துகள் இல்லை: